07. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக யாழ் பொலிஸாரினரால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (31) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் எனக் கருதி, குறித்த 5 பேருக்கு எதிராக தடைவிதிக்கக் கோரி யாழ் நீதவான் நீதிமன்றில் நேற்று (29) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ். சசிகரன் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த 5 பேரையும் இன்றைய தினம் (30) மன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு கோரி நீதிமன்றினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.



