இரட்டை குடியுரிமை! அவையில் வெடித்தது சர்ச்சை

இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்தார்.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும், அது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இதன்மூலம், பேரவையில் தவறான தகவலை அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கம் தென்னரசு உரையாற்றினார்.

இதனையடுத்து, இதற்கு விளக்கமளித்த அமைச்சர் பாண்டியராஜன், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக இரட்டை குடியுரிமை பற்றி வலியுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அகதிகளுக்கு இதற்கு முன்பு இந்திய குடியுரிமையே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால்,

இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் பேசியதில் அவை உரிமை மீறல் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சரின் பதில் மற்றும் சபாநாயகரின் முடிவு திருப்தியில்லை எனக் கூறி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Tags : #India #Refugee #Sri Lanka