இலங்கையில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தற்போது 90 சதவீதமளவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று (10) இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் எஞ்சியுள்ள 10 சதவீத நிலக்கண்ணி வெடி அகற்றும் பகுதிகள், சுமார் 20.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், அவை மிகவும் சிக்கலான காடுகள் மற்றும் கடலோரப் பகுதிகள் அமைந்துள்ள பிரதேசங்களாகும்.
இத்தகைய சவால்கள் நிறைந்த போதிலும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இப்பகுதிகளில் உள்ள நிலக்கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றி, இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற முறையில் இத்திட்டத்திற்குத் தேவையான முழுமையான அர்ப்பணிப்பை வழங்குவதாகவும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை இருமடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆண்டில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் பல சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் புதிய இராணுவத் தளபதி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் மூலம் இராணுவத்தின் பயிற்சி பெற்ற 500 பேரை இப்பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 250 பேர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இதன் மூலம் ஆண்டுக்கு 1.5 சதுர கிலோமீட்டர் பரப்பை இராணுவத்தினர் வெற்றிகரமாகச் சுத்திகரித்து வருகின்றனர்.
இலங்கையின் இந்தச் செயல்முறை திருப்திகரமான மட்டத்தில் உள்ளதுடன், சர்வதேச சமூகம் போற்றும் வகையிலானதொரு சிறந்த நிலக்கண்ணி வெடி அகற்றும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.



