இரகசியங்களை வெளியிட அனுமதிக்கமாட்டேன் – மைத்திரி

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் அரச புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளை வரவழைத்து, இரகசிய தகவல்களை ஊடகங்கள் ஊடாக அம்பலப்படுத்துவதற்கு தாம் ஒருபோது அனுமதி வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போது பணிபுரியும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளை ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜர்படுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவர்கள் தொடர்பான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற மாதாந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை கூறியுள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஐந்து வழக்குகள் தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெரிவுக்குழுவை ஸ்தாபித்து செயற்படுகின்றமையானது உயர் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அமையும் என சட்ட மா அதிபர் எழுத்து மூலம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அந்த கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.