இம்மானுவேல் அடிகளார் மற்றும் சுரேன் ஆகியோரின் பெயர்களை கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கிய மங்களா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்ததாக கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த இரண்டு பேரை, அதிலிருந்து நீக்குமாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனக்கு அழுத்தம் கொடுத்ததாக கிரித்தலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டிணன் கேர்ணல் ஷம்மி குமாரரத்ன தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர செயற்பட்டபோதே தனக்கு இவ்வாறு அழுத்தம் கொடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இம்மானுவேல் அடிகளார் மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோரின் பெயர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்தவர்கள் என கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் தமது நண்பர்கள் எனவும் தாம் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட காலப்பகுதியில் அவர்களுடன் நல்லுறவை பேணி இருந்ததாகவும் மங்கள சமரவீர தன்னிடம் கூறியதாக ஷம்மி குமாரரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த குறித்த இரண்டு பேரை, அதிலிருந்து நீக்குமாறு முன்னாள் மங்கள சமரவீர தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஷம்மி குமாரரத்ன தெரிவித்துள்ளார்.