இனவழிப்பை சந்தித்த நாம் பூச்சியத்திலேயே உள்ளோம் – கிரிசாந்தன்

தாயகத்தில் தமிழினம் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்டது. அந்த இனத்தின் மீது போர் என்ற போர்வையில் திட்டமிட்ட இன அழிப்பு அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த இன அழிப்பின் கொடூரங்கள், வடுக்கள் இன்றும் சமூகத்திலிருக்கின்றன. நாம் அவலத்தின் பின்னர் எதனையும் சாதிக்கவில்லை. நீதியைப் பெறுவதிலிருந்து அனைத்திலும் கேள்விக்குறியாகிய நிலையில் தான் இருக்கின்றோம் என யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் இராஜர ட்ணம் கிரிசாந்தன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆகவே முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது வெறுமனே உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. எமது இனத்தின் விடுதலைக்கான பயணத்துடன் தொடர்பு பட்டதொன்றாகும். இரண்டாம் உலகப் போரில் சொல்லொணா அவலங்களுக்கு முகங்கொடுத்து இனவழிப்புக்குள்ளான யூத இனம் தனது இனவிடுதலைக்கான பயணத்தில் தன்னுடைய அவலங்களை, அனுபவங்களை சந்ததி சந்ததியாக கடத்தி வந்தது.

ஆகவே பரம்பரியத்தினைக் கொண்ட நாமும் எமது சந்ததிக்கு விடுதலை வேட்கையை உணரச் செய்யவேண்டியது தலையாக கடமையாகின்றது. ஆகவே இனவழிப்புக்கு முகங்கொடுத்து விட்டோம் என்றோ நீதி கிடைக்கவில்லை என்றோ நொந்துபோகாது எமது இலக்கை எமது சந்ததிக்கு உணர்த்தும் வகையில் ஆவணங்களை, காட்சிப்படுத்தல்களை, அனுபவப்பகிர்வுகளை முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் நாம் முகங்கொடுத்த அனைத்தையும் எமது அடுத்த சந்ததிக்கு உணரவைக்கும் முகமான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் நாம் எதனையும் செய்யவில்லை. கிடைத்த வாய்ப்புக்களையும் தமிழ்த் தலைமைகள் சரியாக பயன்படுத்தியிருக்க வில்லை.

ஆகவே பத்தாண்டுகளாகின்ற இந்த நினைவேந்தலிலாவது, எமது இனவிடுதலைக்கான வேட்கையை அடுத்த சந்ததிக்கு பாய்ச்சும் அறிவுசார்ந்த நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைவரும் திடசங்கல்பம் கொள்ளவேண்டும்.