ஈரான் ஜனாதிபதிக்கு ரணில் வழங்கிய இராப்போசன விருந்தில் சஜித் கலந்துகொள்ளாததது ஏன்?

ஈரான் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்த இராப்போசன விருந்துபசாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளாமைக்கு காரணம் என்ன என்பதை விளக்கி எதிா்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு –

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களுக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலங்கைக்கான விஜயத்தின் போது ஈரான் ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் விருப்பம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஈரான் தூதரகத்திற்கும் அறிவித்துள்ளது.

அவ்வாறு இருக்கும் போது சில ஊடகங்கள் மேற்கொள்ளும் ஊடக நடவடிக்கைகள் மூலம் ஈரான் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்க முயற்சிப்பது அடிப்படையற்ற விடயமாகும்.

இந்த இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டிருந்தால் “ரணில் – சஜித் அரசியல் டீலுக்குத் தயார்” என்று அவதூறு ஒன்றை உருவாக்கி பரப்பவும் இந்த ஊடகவியலாளர்கள் தயாராக இருந்தமை தெரிய வந்தமை இந்த தீர்மானத்துக்கு வருவதற்கான மற்றுமொரு காரணம் என குறிப்பிட விரும்புகின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில், கௌரவ ஈரான் ஜனாதிபதி அவர்களும், ஈரான் மக்களும் இலங்கையுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளும் நட்புறவை நாம் எப்போதும் மெச்சுகின்றோம்.”