இனப்படுகொலை தொடர்பில் தலைவர்கள் மற்றும் இனப்பற்றாளர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் தலைவர்கள் மற்றும் இனப்பற்றாளர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்:

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான திரு வி. மைத்ரேயன் அவர்கள்

இப்போது தான் நடந்தது போன்று இருக்கிறது. 11 அண்டுகள் உருண்டோடி விட்டது. 2009 மே மாதம் மத்தியிலே தமிழகத்தின் எல்லைக்கு அருகே கூப்பிடு தூரத்திலே வங்கக் கடலுக்கு அப்பால் ஈழத்திலே இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள போர்ப் படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட போது அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நாங்கள் இருந்தோம். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் அமைந்த பிறகு சட்ட மன்றத்திலே இரண்டு முறை அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருமனதான தீர்மானம் ஈழப் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்திலே வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் மீது போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே தான் இருந்தது.

தேசியக் கட்சிகள் யார் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் சரி காங்கிரஸாக இருந்தாலும் சரி பிஜேபி ஆக இருந்தாலும் சரி அவர்களுக்கு தங்களின் பாதிப்புகள் தங்களின் நலன்களைக் காட்டிலும் அண்டை நாட்டின் நல்லுறவு தான் முக்கியமாகக் காணப்படுகிறது. எனவே அவர்களிடமிருந்து இது குறித்து நியாயம் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் ஈழத் தமிழர்களை கைவிட்டு விட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஐ.நா. மன்றத்திலே போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்படும். இத் தீர்மானம் நிறைவேறும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு உருவத்திலே தடங்கல் எற்பட்டு அது நின்று விடும். அது தான் இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றது.

இந்தப் பிரச்சினை குறித்து 2009 முதல் 2019 வரை நாடாளுமன்ற அமர்வில் பலமுறை நான் பேசியிருக்கிறேன். பிரச்சினை எழுப்பியிருக்கிறேன். ஆனால் இதுவரை அதற்கான தீர்வு எட்டப்படவில்லை. இன்று நிறைவேறாமல் இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்கள், உலகளாவிய தமிழர்கள் இது குறித்து தொடர்ந்து தங்களின் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பல்வேறு நாடுகளிடையே சென்று இந்தப் பிரச்சினையினுடைய தீவிரத்தை எடுத்துச் சொல்லி இது குறித்து அவர்களிடத்தில் நியாயம் கேட்க வேண்டும். ஐ.நா. மன்றத்தில் மீண்டும் மீண்டும் கோர வேண்டும். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது போர்க் குற்றம் தொடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அது ஒன்று தான் சரியான நீதியாக இருக்கும். அதற்கு அனைவரும் ஒத்துழைத்து பாடுபட வேண்டும். இந்த ஈழப் படுகொலையில் இன்னுயிரை ஈர்த்த ஈழ மறவர்களுக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி.

வணக்கத்திற்குரிய சக்திவேல் பாதிரியார் அவர்கள்

இது நான் ஏந்துகிற சுடர் இது உயிர்த் தியாகமானவர்களுக்கு மட்டுமல்ல என்னுடைய ஒன்றுபட்ட எழுச்சிக்கும்> ஒன்றுபட்ட சக்திக்குமாக நாம் ஏற்றுகிற சுடராக அமைகிறது. இந்த வருடம் நாம் நடத்துகின்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு. மிக முக்கியமான ஒரு காலகட்டத்திலே நாம் நடத்துகின்றோம். சர்வதேச ரீதியாக கடந்த 11 வருடங்களாக தமிழர் தாயகத்தில் நடந்தது இன அழிப்பு தான் என்று நாம் கூறிவந்த போதும் சர்வதேச வல்லரசுகள், ஐ.நா அமைப்புக்கள் மனித உரிமைகளாக பார்க்கின்றதே தவிர இன அழிப்பு என்பதை பார்க்கவில்லை.

sakthivel இனப்படுகொலை தொடர்பில் தலைவர்கள் மற்றும் இனப்பற்றாளர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்இன அழிப்பு என்று பார்க்காமல் இருப்பதுகூட ஒரு முன்னெடுப்பு தான். இங்கு நடந்த யுத்தக் குற்றங்களை யுத்தக் குற்றங்களாக ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் இன அழிப்பு தான். அது மட்டுமல்ல இலங்கையின் இன அழிப்பு நாயகன் ஜனாதிபதியாக இருக்கின்றார். இந்த நாட்டிலே யுத்தக் கைதிகள் என்று அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஒன்றும் கிடையாது. அரசியல் பிரச்சினை என்று எதுவும் கிடையாது. இந்த நாட்டில் இருப்பது பொருளாதார அபிவிருத்திப் பிரச்சினையே என்று கூறியதை நாம் அறிகின்றோம். இதுவும் கூட இன அழிப்பிற்கு உட்பட்ட ஒன்று தான்.

சர்வதேசம் இன அழிப்பிற்கு துணை போகின்றது. தற்போது பதவியிலிருப்பவர் இன அழிப்பின் நாயகனாக மட்டுமல்ல கொரோனாவை மையப்படுத்தி நாட்டின் அபிவிருத்தி என்ற போர்வையிலே வடகிழக்கிலுள்ள நிலங்களை கையகப்படுத்துவதற்கும் இராணுவ மயமாக்குவதற்கும் திட்டங்களை தீட்டிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். எனவே இன அழிப்பானது இன்னும் இன்னுமாக தொடரப் போகின்ற காலகட்டம். இது பயங்கரமான ஒரு காலகட்டம். இந்தக் காலகட்டத்திலே சர்வதேச ரீதியாக நாம் ஒன்றுபட்ட சக்தியாக இயங்க வேண்டும். தமிழர் தாயகத்தில் எமது அடையாளங்களை, அரசியல் அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலே நாம் இருக்கின்றோம்.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எமது ஒன்றுபட்ட சக்திக்கான> எமது ஒன்றுபட்ட எழுச்சிக்கான தியாக சுடராக அமைய வேண்டும். இதுவே என்னுடைய விருப்பம். கடந்த காலங்களில் எமது ஒன்றுபட்ட முயற்சி, ஒன்றுபட்ட செயற்பாடு இன்னும் இன்னுமாக பலப்பட வேண்டும் என்பதையே இக்காலகட்டம் எமக்கு உணர்த்துகின்றது. தொடர்ந்து நாம் இயக்கமாக செயற்படுவோம். ஒன்றாக செயற்படுவோம். எம்முடைய மக்கள் உயிர்த் தியாகம் செய்தது எமது தேசியத்தை காப்பதற்காக, எமது தேசிய அரசியலை பாதுகாப்பதற்காக. அவர்களுடைய உயிர்தியாகம் வீணாகக் கூடாது. அந்த உயிர்த்தியாகம் கட்டியெழுப்பட்டு, பாதுகாக்கப்பட்ட எமது அரசியல் எமது தேசியம் காக்கப்பட நாமும் ஒன்றுபட்ட சக்தியாக செயற்படுவோம்.

தமிழின உணர்வாளரும் நடிகருமான திரு சத்தியராஜ் அவர்கள்

sathyaraj இனப்படுகொலை தொடர்பில் தலைவர்கள் மற்றும் இனப்பற்றாளர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் மக்களுக்கும் போராளிகளுக்கும் எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்று நாங்கள் எப்போதும் கூறுவோம். அந்த வலிகள் மறக்க முடியாத வலிகள். அந்த வலிகளை விரக்தியாக மாற்றாமல் வலிமைகளாக மாற்றி வரலாறு படைப்போம்.