இந்திய மீனவர் மரணம் – விசாரணை அறிக்கையை எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் அறிவிப்பு

இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறுகளை தாம் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர்தெரிவித்திருக்கின்றார்.

இந்திய மேல் சபையில் நேற்று வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்திய அமைச்சர், “இந்த விவகாரம் தொடர்பில் நாம் எமது எதிர்ப்பை மிக மிக கடுமையாக சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தெரிவித்திருக்கின்றோம். அதற்குப் பதிலாக இச்சம்பவம் குறிதத விசாரணைகளை ஆரம்பிப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிததிருந்தது” எனவும் கூறினார்.

இலங்கையில் தற்போது இந்திய மீனவர்கள் எவருமே தடுப்புக் காவலில் இல்லை எனவும் தெரிவித்த அவர், ஜனவரி 18 ஆம் திகதி இலங்கைக் கடற்படையின் கப்பல் ஒன்றினால் மோதுண்ட இந்திய மீன்பிடிப்படகிலிருந்த 4 இந்திய மீனவர்களின் மரணம் தொடர்பில், நாம் கடுமையான ஒரு நிலைப்பாட்டையே எடுப்போம் எனவும் குறி;ப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகர் கடுமையான கண்டனத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். புதுடில்லியிலுள்ள சிறிலங்காவின் பதில் உயர் ஸ்தானிகருக்கும் கடுமையான எதிர்ப்பை இந்தியா தெரியப்படுத்தியிருந்தது.

தற்போதைய நிலையில் இந்திய மீனவர்கள் யாரும் சிறிலங்காவில் தடுப்புப் காவலில் இல்லை என்பதையும் தெரிவித்திருக்கும் அவர், தடுப்புக்காவலில் இருந்த ஒன்பது மீனவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.