இந்திய மாசிக்கருவாடுக்கு சிறீலங்காவில் தடை

மாசிக் கருவாடு இறக்குமதிக்கு சிறீலங்கா தடை விதித்துள்ளதால், இந்தியாவில்  சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மீனவ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு ரூ.100 கோடி மதிப்பிலான மாசிக் கருவாடு தேக்கம் அடைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல். மீன் பிடி சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், மீனவ மக்களின் வருவாய்க்காகவும் மாசிக் கருவாடு தயாரிப்பு குடிசை தொழிலாக இங்கு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறீலங்கா அரசு மாசிக் கருவாடு இறக்குமதிக்கு கடந்த நவம்பர் 5-ம்திகதி திடீரென தடை விதித்தது. இதனால் மாசிக் கருவாடு தொழில் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த ஏற்றுமதி தடையால் இந்தியாவிற்கு அதிகளவு அந்நிய செலாவணி ஈட்டி தரும் தொழில் நொடிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாசிக் கருவாடு ஏற்றுமதி செய்ய  சிறீலங்கா அரசு திடீரென தடை விதித்ததால் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.