இந்திய – சீன மோதல்: செயற்கைக் கோள் படம் வெளியானது

இந்திய – சீன எல்லையான லாடக்கின் கிழக்குப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு படையினருக்கும் இடையில் நடந்த மோதல்கள் தொடர்பான செயற்கைக் கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு லாடக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய – சீன படையினருக்கிடையிலான மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் பலியாகியதுடன், 40இற்கும் மேற்பட்ட சீன படையினர் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சீன படையினரின் இழப்பு குறித்து சீனா எதுவித தகவல்களையும் வெளியிடவில்லை.

இதேவேளை இந்த மோதல்கள் தொடர்பான செயற்கைக் கோள் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சீனப் பக்கத்தில் ஒரு பெரிய கட்டமைப்பு இருப்பதாகக் காணப்படுகின்றது. இந்த மோதல் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையிலுள்ள நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலிருந்து சில கிலோமீற்றர் துஸரத்தில் உள்ள PP -14 என்னும் இடத்தில் நடந்துள்ளது.

15,000 அடி உயரமான இமயமலைப் பகுதியில் தான் கடந்த 15ஆம் திகதி நூற்றுக் கணக்கான இந்திய வீரர்கள் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் இரும்புக் கம்பிகளாலும், முட்கம்பிகளாலும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் நள்ளிரவு வரை நடைபெற்றுள்ளது. அத்துடன் இராணுவ வீரர்கள் உயரமான பாறைகளில் இருந்து பனிக்கட்டிகளுக்குள் தூக்கி வீசப்படும் காட்சிகள் இந்த படங்களில் உள்ளன. அதன் பின்னர் சீன அம்புலன்ஸ் வண்டிகள் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு செல்வதை இந்தியப் படையினர் கண்காணித்து்ளளனர். பின்னர் உலங்கு வானூர்திகள் அங்கிருந்தவர்களை வேறு இடம் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.