இந்திய அகதிகள் முகாம்களிலுள்ள ஈழத் தமிழ் மக்களுக்கு பேரிடர்கால நிவாரணம் வழங்க வேண்டும். சீமான்

ஈழத் தமிழர்களுக்கு பேரிடர்கால நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது மிகுந்த வேதனையளிப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அடிப்படை வசதிகள் இன்றி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழச் சொந்தங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 110 அகதிகள் முகாம்களில் சுமார் 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 68,600இற்கும் மேற்பட்டவர்களும், முகாம்களுக்கு வெளியே சுமார் 35,000இற்கும் மேற்பட்டவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இவை தவிர சிறப்பு முகாம் என்கின்ற தடுப்பு முகாம்களிலும் ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலுள்ள குடியிருப்புகளில் பல போதிய இடவசதியின்றி நெருக்கடி மிக்கதாகவும், சுகாதாரமற்ற முறையிலும், சரியான கழிப்பிட வசதிகள் இல்லாத பழைய இடிந்த குடியிருப்புகளாகவும் உள்ளன.

எனவே, இக்குடியிருப்புகளில் நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், தமிழக அரசு உடனடியாக முகாம்களில் சுகாதாரத்தை ஆய்வு செய்து போதிய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தருவதுடன், அங்கு வாழும் ஈழத் தமிழர்களின் உடல்நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது தலையாய கடமையாகின்றது.

தமிழகத்திற்குப் பணிபுரிய வந்த பிற மாநிலத்தவர்களுக்கு பேரிடர்கால அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்குவது குறித்து அறிவித்த தமிழக அரசு, நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு பேரிடர்கால நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது மிகுந்த வேதனைக்குரியது.

எனவே, அகதி முகாம்களில் உடனடியாக தமிழக மறுவாழ்வுத்துறையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் அன்றாடம் வேலைகளைச் செய்து வாழ்வை ஓட்டும் நிலையில் தான் உள்ளனர்.

எனவே, தமிழக அரசு அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தற்போது அறிவித்துள்ள நெருக்கடிகால நிதியுதவியை ஈழத் தமிழர்களுக்கும் வழங்கிட வேண்டும் எனவும், மேலும் அரசு அறிவித்துள்ள அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், நிதியுதவியும் முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர் குடும்பங்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும், மூன்று மாதங்களுக்கான இலவச எரிவாயு உருளை உள்ளிட்ட மத்திய அரசால் வழங்கப் பெறும் அத்தியாவசியப் பொருட்களான நிவாரண உதவிகள் ஈழத் தமிழர்களுக்கும் கிடைத்திடவும் தமிழக அரசு ஆவன செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.

மேலும், தமிழக சிறைகளிலுள்ள கைதிகளை கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக சொந்தப் பிணையில் விடுவிப்பது போன்று, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசைக் கோருகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.