இந்தியா வரும் ரஃபேல் போர் விமானம் ஒக்டோபர் 8ஆம் திகதி ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்படும்

கடந்த மாதம் பிரான்ஸ் சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடியிடம், முதல் ரஃபேல் போர் விமானம் செப்டெம்பர் மாதம் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன்,   தற்போது ஒக்டோபர் 8ஆம் திகதியே இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த போர் விமானங்களை பெறுவதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு விமான நிறுவனமான டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 7.8 மில்லியன் யூரோவிற்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2916இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொள்வனவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

செப்டெம்பர் மாதம் தருவதாக அறிவிக்கப்பட்ட போர் விமானங்கள் தற்போது ஒக்டோபர் மாதம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஒப்பந்தப்படி, முதல் ரஃபேல் போர் விமானம் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளது. இதற்காக பிரான்ஸ் நாட்டில் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்குபற்றுகின்றார். இதற்காக அடுத்த மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை செயலர் அஜய்குமார் உட்பட மூத்த அதிகாரிகளும் பிரான்ஸ் செல்லவுள்ளனர்.

இந்த நிகழ்வில் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, போர் விமானம் இந்திய விமானிகளுக்கு இயக்கப்படும் பயிற்சி அளிக்கப்படும்.

அத்துடன், ஒக்டோபர் 8ஆம் திகதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் துர்கா பண்டிகையான தசரா பண்டிகை கொண்டாடப்படும் நாளாகும். எனவே அன்றைய தினம் போர் விமானத்தை பெறுவது சரியாக இருக்கும் என்றும் நம்பப்படுவதாகவும், அதனாலேயே அன்றைய தினம் விமானக் கொள்வனவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை உயர்த்தும் திட்டத்தில் மோடி முனைப்பாக உள்ளார் என்பதை  இந்த முப்படைகளின் வளர்ச்சியில் அவர் காட்டும் அக்கறையில் இருந்து தெரியவருகின்றது.