இந்தியா – சீனா மோதல்: சீன வலைதள எழுத்தாளர் சிறையில் அடைப்பு

இந்தியா, சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த ஆண்டு நடந்த மோதலில் சீன வீரர்கள் அதிக அளவில் இறந்ததாக எழுதிய வலைதள எழுத்தாளர் (ப்ளாக்கர்) சியி ஜிமிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா, சீனா இடையிலான லடாக் எல்லை பதற்றம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் மிகத்தீவிரமாக இருந்தது. அப்போது எல்லையில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையிலான கைகலப்பு, பிறகு மோதலாக வெடித்தது. அதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சீன தரப்பில் எத்தனை பேர் இறந்தனர் என்பது தெளிவாகவில்லை.

பல மாத தாமதத்துக்குப் பிறகு, சீனா தனது தரப்பில் நான்கு வீரர்கள் பலியானதாக  கூறியது.

இந்நிலையில்,லடாக் எல்லையை அடுத்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தாக்குதல்கள் பற்றி ஆன்லைன் பதிவுகளில் எழுதிய சியி ஜிமிங், சீன தரப்பில் அதிக உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறியிருந்தார். ஆனால், அந்த கருத்துகளை மிகைப்படுத்தி எழுதப்பட்டவை என்று கூறிய நீதிமன்றம், தாயக வீரர்களையும் அவர்களின் உயிர்த்தியாகத்தையும் சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக சியி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தது.

சீனாவில் 2020ஆம் ஆண்டு, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தாய்நாட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அல்லது போராடுபவர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படலாம். அத்தகைய குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான் சியி மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி மூன்று ஆண்டுகள் வரை கைதானவரை சிறையில் வைத்திருக்க முடியும்.

நடக்காத ஒன்றை மிகைப்படுத்தி தாய்நாட்டை சிறுமைப்படுத்தியதற்காக பகிரங்கமாக குயி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைடுத்து அரசு தொலைக்காட்சியான சிசிடிவி ஒளிப்பதிவுக்குழு முன்பு தோன்றிய சியி ஜிமிங், “எனது நடத்தை மனசாட்சிக்கு விரோதமாக இருந்தது. எனது செயலுக்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன்,” என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

நன்றி – பிபிசி