இந்தியாவில் பரவி வரும் கொரோனா -பிரித்தானிய விஞ்ஞானிகள் ஆய்வு

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வகை மிகவும் வேகமாகப் பரவக்கூடியதா, தடுப்பூசிகளில் இருந்து தப்பிவிடும் ஆற்றல் கொண்டதா என்பது குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 இலட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,619 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

இந்தியாவில் இது வரையில், ஒரு கோடியே 50 இலட்சத்து 61 ஆயிரத்து 919  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை  மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நேரம் இது வரையில் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 769 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் சேர்த்து சுமார் 70 இந்திய வகைக் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் வெளிநாட்டுப் பயணத்துடன் தொடர்பில்லாத சில தொற்றுகளின் தோற்றுவாய் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக பிரித்தானியாவின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரித்தானியாவின் தேசிய சுகாதாரத்துறையின் பரிசோதனை மற்றும் தேடல் பிரிவின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஹாப்கின்ஸ் ஆண்ட்ரூ மார் தெரிவிக்கையில்,

“இந்திய வகைக் கொரோனா தொற்று சிலரிடம் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். அவை பயணத்தின் மூலம் வந்தவையல்ல. அவை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதை அறிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

தீவிரமாகப் பரவக்கூடியதா, தடுப்பூசியில் இருந்து தப்பிவிடக்கூடியதா என்பவை எல்லாம் தெரிந்தால்தான் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு அது உறுதியாகத் தெரியாது” என்றார்.