இந்தியாவில் தனது சேவைகளை நிறுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சர்வதேச மன்னிப்புச் சபை இந்தியாவில் தனது பணிகளை நிறுத்தியுள்ளது. மத்திய அரசின் நெருக்குதல்களே இதற்குக் காரணம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த மன்னிப்பு சபையின் வங்கிக் கணக்குகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு பணிகளை முற்றாக நிறுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சபையின் செயற்பாடுகளை மத்திய அரசின் முகவர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கியது மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கியது என்பது தற்செயலான சம்பவமல்ல.

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி வன்முறை மற்றும் ஜம்மு காஷ்மீரில் மீறப்பட்ட மனித உரிமைகள் தொடர்பாக டெல்லி காவல்துறை மற்றும் இந்திய அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்ததன் விளைவுதான் இந்த ஒடுக்குமுறை. அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தோமே தவிர வேறொன்றும் செய்யவில்லை என்று இந்த அமைப்பின் இந்திய நிர்வாகத் தலைவர் அவினாஷ்குமார் தெரிவித்தார்.

இந்திய விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றித்தான் நாங்கள் பணியாற்றுகிறோம். எந்த பிரிவு விதிமுறைகளை மீறியது என்று இன்றுவரை தெரியவில்லை என்று கூறிய அமைப்பு, பணமோசடிகளை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச மன்னிப்புச் சபை நடந்து கொள்கின்றது என்று இந்திய அரசு கூறியதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.