இந்தியாவில் ஒரு நாளில் 6,148 பேர் கொரோனாவால்  உயிரிழப்பு – மத்திய  அரசு தகவல் 

இந்தியாவில்  நாளாந்தம் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 6148 பேர் உயிரிழந்துள்ளததாக கொரோனா நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம்  வெளியிட்டுள்ளது.

இதில் ஒருநாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 94,052 பேர் என்றும் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு மேலும் 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. நாட்டில் இதுவரை பதிவான உச்சபட்ச ஒருநாள்  கொரோனா உயிரிப்பு இதுவாகும்.

ஆனால், 6 ஆயிரத்து 148 உயிரிழப்புகளும் கடந்த 24 மணிநேரத்தில் நடந்தவை இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பிஹாரில்  கொரோனா உயிரிழப்பு  மறுகணக்கீடு செய்யப்பட்டு கூடுதலாக 3 ஆயிரத்து 951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால், 6 ஆயிரத்து 148 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே மாநிலத்தில் மட்டும் விடுபட்ட கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 951 ஆக உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.