இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4

4. அராலித்துறைப் படுகொலை 22 அக்டோபர் 1987

அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக தீவுப் பகுதிக்கான போக்குவரத்துப் பாதையாக அராலித்துறை விளங்கியது. அக்காலப்பகுதியில் தீவுப்பகுதி மக்கள் அராலித்துறைப் பாதையினூடாகப் போக்குவரத்தில் ஈடுபட்டனர்.

1987ஆம் ஆண்டு அக்டோபர் இருபத்திரண்டாம் நாள் தீவுப் பகுதியிலிருந்து யாழ் நகரம் நோக்கி பதினைந்து வரையான இயந்திரப் படகுகளில் முந்நூறிற்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்தனர். அன்று மதியம் அராலித்துறைக் கரையில் தரையிறங்கிய பொதுமக்கள் மீது இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதால் அச்சமடைந்த மக்கள் அராலித்துறை மடத்தில் தஞ்சம் புகுந்தனர். பாதுகாப்புத்தேடி ஓடிய, தஞ்சமடைந்த மக்களை இலக்கு வைத்து ஏழிற்கும் மேற்படட் றொக்கட் குண்டுகள் வீசப்பட்டது.

இதனால் அராலித்துறை மடத்தடியில் தஞ்சம் புகுந்த பயணிகள் முப்பத்தைந்து பேர் உயிரிழந்தனர். முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஏழிற்கும் மேற்பட்ட படகுகள் முழுமையாக சேதமடைந்தன.

சில படகுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இறந்தவர்களின் சடலங்கள்,காயப்பட்டவர்கள் மீள மறுகரைக்கு கொண்டு செல்லப்பட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் தீவுப்பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் அடங்குவர்.

4ஆம் குறுக்குத் தெரு,தண்ணீர்தாங்கியடி, குருநகர் என்னும் முகவரியைச் சேர்ந்த பியஸ் மரியதாஸ் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார்,

“நான் ஒரு கடற்றொழிலாளன். ஒக்ரோபர் 10 ஆம் திகதி எறிகணைகள் எமது பிரதேசத்தில் வீழ்ந்து வெடித்தன. இவ்வெறிகணைகள் இந்திய இராணுவம் இருந்த கோட்டையிலிருந்தே ஏவப்பட்டன. இதன் காரணமாக மாலை 4 மணியளவில் குடும்பத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி,புனித பத்திரீசியார் கல்லூரியில் தங்கினோம். அதற்கு அருகிலும் எறிகணைகள் வந்து விழத்தொடங்கியதால் நாம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்குப் போய் அங்கே தங்கினோம்.

ஒக்ரோபர் 20 ஆம் திகதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் அறையொன்றின் மீது எறிகணை ஒன்று வந்து விழுந்து வெடித்தது. இதில் மூவர் கொல்லப்பட மேலும் 15 பேர் காயமடைந்தனர். ஏறத்தாள எம்மில் 70 பேர் சேர்ந்து பேரூந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அராலி இறங்குதுறை ஊடாக காரைநகருக்குப் போக ஆயத்தமானோம். காலை 8 மணியளவில் நாம் இறங்குதுறையை வந்தடைந்தோம். எம்மில் சிலர் நான்கு படகுகளில் ஏறி சரவணை இறங்குதுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். அந்நேரத்தில் எமக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்த உலங்குவானூர்திகள் நாமிருந்த படகுகளை நோக்கி சுடத்தொடங்கின. ஒரு மணித்தியாலம் அவர்கள் சுட்டார்கள்.jaffna 6 இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4

என்னுடைய மகள் மரியதாஸ் சுலோஜினியும் (வயது 15) மாமியான சலாமிபிள்ளையும் இதில் கொல்லப்பட்டார்கள். எனது மனைவியான மரியதாஸ் இமெல்டா (வயது 36),மாமா செபஸ்ரி சேவியர் ஆகியோர் இதில் படுகாயமடைந்தனர். நாம் கடற்கரைக்கு அருகில் இருந்ததால் நான் என்னுடைய மற்றைய மூன்று பிள்ளைகளையும் தூக்கி,கடலுக்குள் இறக்கிவிட்டேன். எனது மகன்மாரான சுரேந்திரனும் சுதாகரும் கடலில் நின்றுகொண்டிருந்தபோது காமயமடைந்தார்கள். நான் மூன்று பிள்ளைகளையும் கரைக்குக் கொண்டுசென்றேன். பின்னர், குடும்பத்தில் ஏனைய காயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் சடலங்களையும் கரைக்குக் கொண்டுசென்றேன்.

காயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் சடலங்களையும் காரைநகர் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றார்கள். மனைவி வைத்தியசாலையில் இறந்துபோனார். அவருடைய சடலம் அச்சம்பவத்தில் கொல்லப்பட்ட ஏனைய 13 பேரின் சடலங்களுடன் ஒன்றாகச் சேர்ந்த்து காரைநகர் சேமக்காலையில் புதைக்கப்பட்டது. மேலும் ஐந்து சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பபட்டன.”

10, மத்திய மேல்வீதி, குருநகரைச் சேர்ந்த கிறிஸ்துராஜா றீற்றம்மா தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார்,

“ஒக்ரோபர் 10 ஆம் திகதி கொழும்புத்துறையிலிருந்த செபமாலை மாதா தேவாலயத்தில் நாம் தஞ்சமடைந்தோம். ஒக்ரோபர் 11 ஆம் திகதி, நாம் கொழும்புத்துறை இந்துக்கல்லூரிக்கு இடம்பெயர்ந்தோம். மீண்டும் ஒக்ரோபர் 14 ஆம் திகதி, எறிகணைகள் நாம் இருந்த இடத்திற்கு அருகாக வந்து விழத்தொடங்கியமையால்,அங்கிருந்து வெளியேறி சென். பத்திரீசியார் தேவாலயத்திற்கு இடம்பெயர்ந்து சென்றோம். மறுபடியும் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் தஞ்சமடைந்தோம். ஒக்ரோபர் 20 ஆம் திகதி அக்கல்லூரிமீது நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். இதனால் சரவணைக்குச் செல்லும் நோக்குடன் அராலி இறங்குதுறைக்குச் செல்ல மேலும் 70 பேருடன்சேர்ந்து தீர்மானமெடுத்தொம். நாம் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, உலங்குவானூர்தித் தாக்குதலுக்கு ஆளாகினோம்.

தாம் பொதுமக்கள் என்பதைக் காட்டுவதற்காகப் பெண்கள் தங்களது குழந்தைகளைத் தூக்கிக் காட்டினார்கள். ஆனால் தாக்குதல் தொடர்ந்தும் நடந்தது. என்னுடைய மகள் கமலநாயகியும் அப்பா முடியப்பு கிளிஸ்ரியனும் கொல்லப்பட்டார்கள். எனக்கு மணிக்கட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. என்னுடைய மற்றைய மகள்களான சகாயநாயகிக்கும் மீராவுக்கும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன.

ஒக்ரோபர் 22ஆம் திகதி, எம்மில் படுகாயமடைந்தோர் மூளாய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டோம். நவம்பர் முதலாம் திகதி,மூளாய் வைத்தியசாலையும் உலங்குவானூர்தித் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதில் பலர் கொல்லப்பட்டார்கள். நான் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, எனது உறவினர் ஒருவருடன் தங்கினேன்.”

கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் தொழில் வயது)

01 யேசுதாசன் ஜீவகுமார், மாணவன்,06
02 யேசுதாசன் குமுதினி,மாணவி, 09
03 முதியப்பு கிறிஸ்தியன், 70
04 கிறிஸ்ரிராஜா கமலநாயகி, மாணவி, 10
05 ஆரோக்கியம்ää வீட்டுப்பணி, 40
06 மரியதாஸ் சுலோஜினி,மாணவி, 15
07 மரியதாஸ் இமெல்டா,
08 சலாம்பிள்ளை,