ஆப்கானிஸ்தான் இராணுவத் தாக்குதலில் 10 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தன் அரசுப் படையினர் நடத்திய தாக்குதலில் 10 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் அஸ்பாண்டி பகுதியில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் 10பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் ஆப்கானிஸ்தான் படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் – தலிபான்கள் இடையிலான போரை முடிவிற்குக் கொண்டுவர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இருந்த போதும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டி அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கை ஒன்று டோகாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.