ஆனந்த சுதாகரனின் விடுதலை கானல்நீர், ஆனால் படுகொலையாளி விடுதலை- செ. மயூரன்

ஆனந்தசுதாகரனின் விடுதலை கானல் நீராகியுள்ள நிலையில் படுகொலையாளி விடுவிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் இராணுவ வீரரொருவர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த நாட்டை ஆண்டவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கியிருந்தால் தமிழ் மக்கள் அவர்களுக்கு எதிராக போராடவேண்டியேற்பட்டிருந்காது.

எமது சகோதரர்களான அரசியல் கைதிகள் சிறையில் வாடுவதற்கு பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களே காரணமாகும். தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்காது தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்த பேரினவாத அரசாங்கங்ககோடு உறவாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் இனியாவது தமிழர்களின் நலன்சார்ந்து சிந்திக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் விடுதலை செய்யப்படுவார் என சொல்லப்பட்ட ஆனந்தசுதாகரனின் விடுதலை இன்றும் கானல் நீராகவே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை படுகொலை செய்ததாக நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட இராணுவத்தினரை பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜனாதிபதியின் செயற்பாடானது ஒரு பக்கச்சார்பானது என்பதனை வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறான ஒருபக்கச்சார்பான செயற்பாடு ஜனாதிபதியாக இருக்கும் ஒருவருக்கு ஏற்புடையதல்ல. இந்த நாட்டில் சட்டம் நீதி உள்ளதா என்கின்ற சந்தேகத்தினை இச் செயற்பாடு வலுவடையச்செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற ரீதியில் தன் இனத்தினதும் இராணுவத்தினரதும் மனங்களை குளிர்மைப்படுத்தி அடுத்த கட்ட அரசியலை செயற்படுத்துகின்றார். அதன் காரணத்தினாலேயே கோத்தபாய ராஜபக்ச இராணுவ அதிகாரி என்பதனையும் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டியவர்களாகின்றோம்.

எனவே தமிழ் மக்கள் இந்த நாட்டில் சம உரிமைகளை பெற்று வாழ வேண்டும் என்பதனை ஜனாதிபதியின் செயற்பாடு எடுத்தியம்புகின்றது என்பதனை மனத்தில் கொண்டு தமிழ் தலைமைகள் தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.