அர்ச்சகர் ரூபன் படுகொலை – சைவ மகா சபை கடும் கண்டனம்

புங்குடுதீவு – பாணாவிடை சிவன் ஆலய பிரதம அர்ச்சகர் ரூபன் சர்மாவின் படுகொலையை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்புக்களை சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்படி படுகொலை தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாய் மதமாம் சைவ சமயத்தில் அளவுகடந்த பற்றுறுதி கொண்ட ரூபன் சர்மா, ஜீவகாருண்யத்திற்காக அதிகம் போராடியவர். சமூக விரோத செயல்களுக்கு எதிராக துணிந்து குரல்கொடுத்தவர். இந்த நிலையிலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த கொலையின் பின்னணி ஆராயப்பட்டு உண்மை வெளிக் கொண்டு வரப்படவேண்டும். கொலையாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இதன் மூலம் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டும்.

மனிதத்துவத்திற்கும் ஜீவகாருண்யத்திற்கும் போராடி உயிர்துறந்த தாய் மதத்தில் அளவு கடந்த பற்றுறுதி உடைய வணக்கத்துக்கும் போற்றத்துக்குரிய ரூபன் சர்மாவிற்கு ஆத்மார்த்த அஞ்சலிகள். அவரது ஆம்மா இறை சிவனின் பாதார விந்தங்களில் சாந்திபெறும். அவரது நல்ல எண்ணங்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.