அரச வைத்தியசாலை ஊழியர்கள் அணியவேண்டியது  சீரூடையா? மத உடையா? : பா.அரியநேத்திரன்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடந்த 2026 ஆகஸ்ட் 06ல் சுகாதார அமைச்சினால் புதிதாக பணியாளர்களாக நியமனம் பெற்ற 09, முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்கள் நடைமுறையில் உள்ள சீருடையை மீறி முஸ்லிம் மத கலாசார உடை அணிந்து கடமைக்கு சென்றதும் அந்த ஆடையை மாற்றி சுற்றுநிருபத்தில் உள்ளவாறு சீருடை அணிய கல்முனை வடக்கு வைத்தியசாலை நிர்வாகம் பணித்தமையை ஏற்றுக்கொண்ட அந்த 09 இஸ்லாமிய பெண்களும் பின்னர் சிலருடைய தூண்டுத லால் சீருடை அணியாமல் மீண்டும் அதே கலாசார உடை அணிந்தமையால் ஏற்பட்ட பிரச்சனையானது கவன ஈர்ப்பு போராட்டங்கள் சமூக வலைத்தளங்களின் ஏட்டிக்கு போட்டியான விமர்சனங்கள் என தொடர்ந்து வரும் நிலையில் அம்பாறை மாவட்ட இலங்கை தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி உடனடியாக அந்த 09, பணியாளர்களும் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் மழை விட்டாலும் தூவானம் குறையவில்லை என்ற விதமாக இப்போது அரசியல் பிரச்சனையாக மாறி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள். எதிர்கட்சி தலைவர் சஜீத்பிரமதாசா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் றவூப் ஹக்கீம் உட்பட சில அரசியல் வாதிகள் அந்த பணியாளர்களை மீண்டும் அதே மத கலாசார உடையுடன் கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என நாடாளுமன்றத்திலும் உரையாற்றி நேரத்தை வீண்டிப்பதை காணமுடிந்தது.
போதாக்குறைக்கு சில முஷ்லிம் பிரமுகர்கள் கொழும்பில் சுகாதார அமைச்சுக்கு சென்று தங்களுடைய நியாயத்தை முன்வைத்தனர். உண்மையில் எந்த முஸ்லிம் நபர்களும் சுற்று நிருபத்துக்கு மாறாக சீருடை அணிந்தது தவறு என்பதை கூற வில்லை.
சீருடை என்ற பிரச்சனையை இந்துமத பெண்கள் பொட்டு கௌரிக்காப்பு என்பவற்றுடன் ஒப்பிட்டு சில முட்டாள்தனமான கருத்தை கூறுவதையும் காணமுடிகிறது. உண்மையில் சீருடைக்கும் நெற்றியில் இடும் பொட்டுக்கும், கையில் கட்டும் நூல் காப்புக்கும் வித்தியாசம் தெரியாத அல்லது வித்தியாசம் தெரிந்தும் வேண்டு மென்றே இனவாதமான கருத்துக்களை சில முஸ்லிம் நபர்கள் வெளியிடுவது அவர்களுடைய அறிவீனமே.
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களை சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் 09 முஸ்லிம் பெண் ஊழியர் களையும் உடனடியாக அவர்கள் இருந்த இடத்திலேயே அமர்த்தி அவர்களுக்கு அவர்களின் கலாசாரத்திற்கமைய சீருடையை வழங்கி நியமனம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சீருடை சம்மந்தமான சுற்று நிருபத்தை மறந்து அல்லது உதாசீனம் செய்து உரையாற்றியுள்ளார்.
அப்படியானால் அந்த சுற்று நிருபம் எதற்கு அதனை இரத்துச்செய்யுங்கள் என எதிர்கட்சி தலைவர் கூறவில்லை? இதேவேளை சீருடை சம்பந்தமான சுற்றுநிருபத்தை உடனே அமுல் படுத்துமாறு கோரி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ! வைத்தியசாலையின் நிரந்தர சேவை யாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன் னெடுத்தனர்.
உண்மையில் இதனை விமர்சிப்பவர்கள், அல்லது கல்முனை வடக்கு வைத்தியசாலை நிர்வாகம் எடுத்த முடிவை தவறு என கூறுபவர்கள் சமூக ஊடகங்களில் தேவையற்ற தனிநபர் தாக்குதல்களையும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே வெறுப்பூட்டும் பதிவுகளை இடுபவர்களும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் வாதிகள் மத அடையாளமென்ற போர்வையில் இலங்கையின் அரச நெறிமுறைகளை மாற்ற முயற்சிக்கும் சில முஸ்லிம் மதவாத குழுக்கள். எல்லோரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை அரசினால் வைத்தியசாலையில் கடமைபுரியும் பணியாளர்கள் எவ்வாறான சீருடை அணிய வேண்டும் என்ற சுற்று நிருபங்கள் ஏற்கனவே 2019.06.26 திகதிய 13/2019(1) மற்றும் 2022.09.27 திகதிய 05/2022 ஆகிய சுற்றறிக்கைகள் 2022.11.28 ஆம் திகதி அரசாங்கத்தினால் முற்றாக இரத்துச் செய்யப்பட்டு விட்டன.
தற்போது கடந்த 1989.02.01 ஆம் திகதிய 8/89 இலக்க அரச சுற்றுநிரூபம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதன் அடிப் படையிலேயே வைத்தியசாலை நிர்வாகம் சட்டப்பூர்வமாகச் செயற் பட்டுள்ளது.
சுற்று நிருப நடைமுறையை விளங்கிக்கொள்ளாத  எதிர் கட்சிதலைவர் சஜீத் பிரமதாசா தொடக்கம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், சீருடை சுற்று நிருபத்துக்கு மாறாக குறுகிய அரசியலுக்காக பேசுவதையே காணலாம்.
இவ்வாறு விதண்டாவாத கருத்துக்களை கூறுபவர் கள் சீருடை சம்மந்தமான சுற்று நிருபத்தை மீளப்பெற்று அல்லது அதனை மாற்றி ஒவ்வொரு மதத்தவரும்  அவர்கள் விரும்பிய மத அடையாள ஆடைகளை அணியலாம் என சுற்று நிருபத்தை திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச் சருக்கு அழுத்தம் கொடுப்பதைவிட்டு கல்முனை வடக்கு வைத்தியசாலை நிர்வாகத்தை பிழையாக விமர்சிப்பதை நிறுத்துவது நல்லது.
சீருடை சம்மந்தமாக நடைமுறையில் ஒரு சுற்று நிருபம் இருக்கத்தக்கதாய் அதனை மீறி முஸ்லிம் மதத்தவர் கள் அவர்களுடைய மத கலாசார உடை அணியமுடியும் எனில் ஏன் ஏனைய பௌத்த, இந்து, கிறிஸ்தவ, கத் தோலிக்க மதங்களை பின்பற்றுபவர்கள் அவர்களுடைய மத அடையாள உடைகளை அணிய அனுமதிக்க முடியாது, சிந்திக்கவேண்டியது அல்லவா? ஒவ்வொரு மதத்தவர்களும் அவர்கள் விரும்பிய உடை அணிவதென்றால் சீருடை எதற்கு?
சீருடை என்பதற்கான வரைவிலக்கணம் உண்டு சீருடை என்பது பொதுவான உடையே அன்றி அது எந்த மதத்தவர்களும் அவர்கள் விரும்பியபடி மாற்றும் வினோத உடை இல்லை என்பதை சரியாக விளங்கிக்கொண்டால் எவரும் எந்த சச்சரவுகளும் செய்யவேண்டியதில்லை இனவாதம், மத வாதம், தனிமனித விமர்சனம், வைத்தியசாலை நிர்வாகத்தை விமர்சனம் செய்யும் சகலரும் முதலில் சீருடை சுற்றுநிருபத்தை மாற்றுவதற்காக பேசுவதே சரி அதைவிட்டு வீணான விமர்சனங்களை தவிர்பது நல்லது.