அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

aothi ram அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது.

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைக்க உள்ளனர்.

ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு வருகிறார். 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி அளவில் வருகின்றனர். கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கும். 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர்மோடி, உத்தர பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர். குழந்தை ராமரை வழிபட பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்க 200 டன்னுக்கும் அதிகமான மலர்கள், 150 டன்னுக்கும் அதிகமான அசோக மரஇலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலர் அலங்கார பணியில் ஈடுபட்டனர். குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக பிஹாரில் இருந்து ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில்ஒவ்வொரு மலரிலும் ராமர் உருவம் வரையப்பட்டுள்ளது.

கோயில் உட்பட அயோத்தி நகரம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயில் கருவறை தங்கத்தில் செய்யப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மின் விளக்கு அலங்கார பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் தலைவர் பராக்பட்னாகர் கூறும்போது, ‘‘கருவறையில் குழந்தை ராமர் சிலை பகுதியில் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட மின் விளக்குகளால் அலங்காரம் செய்துள்ளோம். இதன்படி, கருவறையில் மட்டும் 10 தங்க விளக்குகளை பொருத்தி உள்ளோம். கோயில் வளாகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட அதிநவீன மின் விளக்குகளை பொருத்தி இருக்கிறோம். உலகத் தரத்தில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இன்று இரவு கோயில் வளாகம், சரயு நதியின் படித்துறைகள் உட்பட அயோத்தி முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.

திறப்பு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று அயோத்தி நகரில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. அயோத்தியின் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடார நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஓட்டல், விடுதிகளில் அவர்கள் தங்கியுள்ளனர். திறப்பு விழா முடிந்த பிறகு, நாளை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீராமஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இருந்து மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் நேற்று முதல் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். இன்றும் 100 தனியார் விமானங்களில் சிறப்பு விருந்தினர்கள் அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளனர். அயோத்தியில் ஒரே நேரத்தில் 100 விமானங்களை நிறுத்த முடியாது என்பதால், சிறப்புவிருந்தினர்கள் வரும் விமானங்கள் அருகில் உள்ள மற்ற விமான நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று லக்னோ விமான நிலையம் வந்தார். அவர் இன்று காலை லக்னோவில் இருந்து அயோத்திக்கு காரில் செல்கிறார். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நேற்று விமானங்கள் மூலம் லக்னோவுக்கு வந்தனர். அவர்கள் லக்னோவில் இருந்து அயோத்திக்கு சாலை மார்க்கமாக செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.