அமைதிக்கான நோபல் பரிசிற்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் பெயரை நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “பிற வேட்பாளர்களைவிட ட்ரம்ப் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார் என நினைக்கிறேன். ஐக்கிய அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட ட்ரம்ப் வழிவகுத்துள்ளார். இது மத்திய கிழக்குப் பகுதிகளை செழிப்பு மண்டலமாக மாற்றும்” என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குமிடையே வெளியுறவுத் தொடர்பு உடன்படிக்கை ஏற்பட மத்தியஸ்தம் வகித்தது அமெரிக்கா.

பாலஸ்தீனத்திற்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்ட காலமாக இருந்து வந்தன. ஆனால் 1979இல் எகிப்துடனும் 1994இல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.

ட்ரம்ப் இன் பெயர் அமைதிக்கான நோபல் பரிசிற்கு முன்னரும் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.