அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டால் பாதிப்பு ஏற்படும் – கமலா ஹரிஸ்

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டால், ஜனநாயகக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என அக்கட்சி சார்பில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா செனட்டராக பதவி வகிக்கும் அவர் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்த செனட் புலனாய்வுக் குழுவில் நானும் இருந்தேன். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

மேலும் இத்தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என தெரிகிறது. அவ்வாறு இருந்தால் அது ஜனநாயகக் கட்சியை பாதிக்கும். 2013இல் உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக, ஷெல்பி ஹோல்டர் என்பவரின் ஓட்டுரிமை முடக்கப்பட்டது. இதையடுத்து, கறுப்பர்கள், தனிநபர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் ஓட்டுரிமையை முடக்கும் செயல்கள் தொடர்கின்றன.

கொரோனா குறித்து வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கையை, ட்ரம்ப் அலட்சியப்படுத்தி விட்டார். அதே கொரோனா  பிரச்சினையை தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றார். இப்படிப்பட்ட ஒருவர் அமெரிக்க அதிபராக உள்ளார். எத்தகைய தடைகளையும் கடந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், வட கரோலினா மேல் முறையீட்டு நீதிமன்றம், கறுப்பர்கள் ஓட்டுப் போடுவதை தடுக்கும் வகையில் மிக நுணுக்கமான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தேர்தல் முறையில் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கான அத்தனை செயற்பாடுகளையும் ட்ரம்ப் செய்து வருகின்றார். நாங்கள் வென்று ஆட்சிக்கு வந்தால், தேர்தல் முறையில் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவோம். மக்கள் ஓட்டுப் போடுவதற்கான தடையை அகற்றுவோம் என்று கூறியுள்ளார்.