அமெரிக்கா – ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியது;32 ஆண்டு ஏவுகணை ஒப்பந்தம் முறிவு

அமெரிக்காவும்-ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ‘நடுத்தர ரக அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தை (ஐஎன்எப்) நேற்று முறித்துக் கொண்டன. அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையே நிலவி வந்த பனிப்போரால், உலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இருநாடுகளும் போட்டிப் போட்டு அணு ஆயுதங்களை தயாரித்தன. இது, உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அப்ேபாதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும், சோவியத் தலைவராக இருந்த மிக்கேல் கார்பசேவும் கையெழுத்திட்டனர். உலக ஆயுத கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல் கல்லாக கருதப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி  ‘9எம்729’ என்ற புதிய ரக  ஏவுகணைகளை ரஷ்யா தயாரிப்பதாக அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம்சாட்டி வந்தது. இந்த ஏவுகணைகள் 1,500 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கும் திறன் வாய்ந்தவை என நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், இது 480 கி.மீ தூரம் வரைதான் செல்லும் என ரஷ்யா கூறி வந்தது. இந்நிலையில், அணு ஏவுகணை ஒப்பந்தத்தை இனிமேல் தொடர்வதில் அர்த்தம் இல்லை என முடிவு செய்த அமெரிக்கா, இதிலிருந்து வெளியேறும் நடவடிக்கையை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. அதன்படி, இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும், ரஷ்யாவும் நேற்று முறித்துக் கொண்டன. இந்த ஒப்பந்தம் இறந்து விட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது.

இந்த ஒப்பந்த முறிவுக்கு ரஷ்யாதான் காரணம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டினார். இந்த ஒப்பந்த முறிவு இரு நாடுகள் இடையே மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்றும், பனிப்போர் மீண்டும் தொடங்கும் என்றும் அஞ்சப்படுகிறது.