அமெரிக்காவில் வன்முறை –ட்ரம்பை பதவி நீக்க வலியறுத்தல்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் நேற்று நடந்த வன்முறையை தூண்டி விட்டவர் என்ற முறையில் அதிபர் ட்ரம்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கோரி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 3ம் திகதி நடந்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனிடம் தோற்றுப் போனார். அந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு மாநில வாரியான தேர்வாளர் பட்டியல்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 6ம் திகதி உறுதி செய்யப்பட வேண்டியிருந்த நிலையிலேயே நாடாளுமன்றத்தில் வன்முறை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று காலை அவரது ட்விட்டர் கணக்கின் இடைக்காலத் தடை நீங்கியதும், அதிபர் ட்ரம்ப் நேற்று நடந்த வன்முறையை கண்டித்தும் அமைதியாக அதிகாரத்தை கைமாற்றிக் கொடுப்பதாகவும் உறுதி அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வன்முறையைத் தூண்டி விட்ட அதிபர் ட்ரம்ப், அவரது பதிவிக்காலம் முடியம் ஜனவரி 20 வரை அதிகராக நீடிக்கக் கூடாது என்று ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25ஆவது திருத்தத்தின், பிரிவு 4ன் கீழ், ஒரு அதிபர் பதவி வகிக்க தகுதி இழந்து விட்டதாக கருதும் நிலையில் அவரது அமைச்சரவை அவரை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கலாம்.

அந்தப் பிரிவை பயன்படுத்தி அதிபர் ட்ரம்பை பதவியிலிருந்து நீக்குமாறு பிரதிநிதிகள் சபை தலைவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்சை கேட்டுள்ளார். மேலும் அமைச்சரவை ட்ரம்பை நீக்கவில்லை என்றால் பிரதிநிதிகள் சபை அவரை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ட்ரம்ப் மிக அபாயகரமான நபர் என்றும் அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பெலோசி கூறியிருந்தார்.

அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தில் உள்ள 25வது சட்டத் திருத்தம் என்றால் என்ன?

இந்த சட்டமானது 1967ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலையைத் தொடர்ந்து இந்த சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதிபர் எந்த பணியையும் சிறப்பாக பார்க்கவில்லை, ஆனால் அந்த பதவியில் இருந்து விலக மறுப்பது குறித்து சட்டத் திருத்தத்தின் பகுதி நான்கு தெரிவிக்கிறது. அதிபர் உடல் அல்லது மனநோயால் தகுதியற்றவராக இருக்கும்போது அமைச்சரவை விண்ணப்பிக்க வேண்டும் என்று 25 ஆவது திருத்தத்தின் வரைவுதாரர்கள் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அதிபர் பணிக்கு மிகவும் ஆபத்தாக இருப்பவர்களின் மீதும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்தலாம் என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் அடுத்த அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு, தற்போதைய அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து விலக இன்னும் பதினான்கு நாட்களே உள்ளன. இருந்தபோதிலும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் இன்னும் விரைவாக ட்ரம்ப் அப்பதிவியில் இருந்து நீக்கப்படுவார்.