அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் சுட்டுக்கொலை – போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது

அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவரை அங்குள்ள காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அடுத்து போராட்டங்கள் நடந்து வருகின்றது.

இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 20 வயதாகும் டான்டே ரைட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்டை அங்குள்ள காவல்துறையினர் கடுமையான முறையில் தாக்கி கொலை செய்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில், மீண்டும் அவ்வாறு ஒரு சம்பவம் புரூக்ளின் சென்டர் பகுதியில் நடந்துள்ளதையடுத்து அங்கு பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. சில இடங்களில் வன்முறைகள்  நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால், தீவிரமாகும் பதற்றத்தை தடுக்க நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டிருக்கதாக கூறப்படுகின்றது.