அமெரிக்காவின் அதிவேக போர்க்கப்பல் திடீரென புறப்பட்டது

அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த அதிவிரைவு போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். கேப்ரியல் கிஃபோரட்ஸ் புதிய தாக்குதல் ரக ஏவுகணை மற்றும் ஆளில்லா உலங்கு வானூர்தி ஆகியவற்றுடன் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான்டியாகோவை விட்டு இம்மாத தொடக்கத்தில் திடீரென புறப்பட்டுச் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கப்பலில் இருக்கும் ஏவுகணையை ராடர் சாதனத்தால் கண்டுபிடிப்பது கடினமாகும். இந்தக் கப்பல் சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டதாகும். அதேபோல் இக்கப்பலில் இருக்கும் MQ-8.B  ஃபயர் ஸ்கௌட் உலங்கு வானூர்தியும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட உலங்கு வானூர்தியாகும்.

தென்சீன கடல் பகுதியில் சீனா பெரும் சவாலாக இருக்கின்றது. பசுபிக் கடலின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஏவுகணைகளை சீனா நிலைநிறுத்தி வருகின்றது. இதுபோன்ற அவசரமான சூழ்நிலைகளை துரித கதியில் கையாள இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும் எனத் தெரிகின்றது.

தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இதேபோல வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளடங்கிய  நாடுகளும் அக்கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடுவதால் அந்நாடுகளுக்கும் சீனாவிற்கும் மோதல் போக்கு நிலவுகின்றது.

இதில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. தென்சீனக் கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், அப்பகுதி வழியே தனது போர்க் கப்பல்களையும் தொடர்ந்து அமெரிக்கா அனுப்பி வருகின்றது. எனினும், யு.எஸ்.எஸ்.கேப்ரியல் கிஃபோரட்ஸ் போர்க் கப்பல் எங்கு புறப்பட்டுச் சென்றது என்பது தெரியவில்லை.

அமெரிக்கக் கடற்படையும் அது எங்கு சென்றுள்ளது என்பதை அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. சிங்கப்பூரில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். மொற்கோமெரி போர்க் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சிங்கப்புருக்கு யு.எஸ்.எஸ். கேப்ரியல் கிஃபோரட்ஸ் சென்று கொண்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சீனாவை பதற்றத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.