அமலுக்கு வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக்கைதிகள் விடுவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் கூட இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேல் பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்க பணியாளர்களிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.

மூன்று பணயக்கைதிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

காஸாவில் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணி முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை நிறுத்தப்படும். மேலும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும், 30 பாலத்தீனிய கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என கூறியுள்ள ஹமாஸ், இன்று 90 பேர் விடுவிக்கப்பட வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகளின் முயற்சியால் ஏற்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸால் கடத்தப்பட்ட 250  பணயக் கைதிகளில்தற்போது உள்ள 98 பேரில் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலின் பல்வேறு சிறைகளில் இருக்கும் 2000 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.