இலங்கையின் பௌத்த கட்டமைப்புகளும் சிங்கள அரசுகளின் கட்டமைப்புகளும் தொடர்ச்சியாக வடகிழக்கு தமிழ் மக்களை புறக்கணித்த நிலைமையே இருந்து வருகின்றது. காலத்திற்குக் காலம் ஆட்சிக்குவரும் அரசாங்கங்கள் தங்களை நல்லவர்கள் போல் தமிழ் மக்களிடம் வேடங்களை போட்டுக்கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்றதன் பின்னர் அவர்கள் இனவாத நோக்குடன் செயற்பட்டு வருவதே நடந்துவருகின்றது.
வடகிழக்கு தமிழர்கள் தாயகம் என்பது தொடர்ந்தும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக போக்குவரத்து துறையென்பது வடகிழக்கில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலைமையே இருந்து வருகின்றது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் முதுகெலும்பாகத் திகழ்வது அந்நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பாகும். இலங்கையைப் பொறுத் தவரை, தென்பகுதி மற்றும் மேல் மாகாணங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள், நவீன பல்நிலை போக்குவரத்து நிலையங்கள், சொகுசுப் பேருந்துகள் மற்றும் விரைவு ரயில் சேவைகள் எனப் போக்குவரத்துத் துறை பாரிய நவீன மயமாக்கலுக்கு உட்பட்டு வருகின்றது.
ஆனால், நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டெழத் துடிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களுக்கு நவீன போக்குவரத்து வசதிகளை வழங்கு வதில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.
இலங்கையின் தென்பகுதியை இணைக்கும் வகையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை எனப் பல நவீன வீதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, அவற்றின் பயன்களை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதன் மூலம் பயண நேரம் குறைக்கப்பட்டு, வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறைகள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.
ஆனால், நாட்டின் வடபகுதியையும் கிழக்குப் பகுதியையும் தலைநகருடன் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் வெறும் பேச்சளவிலும், திட்டமிடல் மட்டத்திலுமே முடங்கிக் கிடக்கின்றன. இன்றும் வடகிழக்கு மக்கள் கொழும்புக்கோ அல்லது ஏனைய மாகாணங்களுக்கோ செல்வதற்குப் பல மணிநேரம் சாதாரண வீதிகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இலங்கை போக்குவரத்து சபை துறைகளில் நவீன பேருந்து கள் அறிமுகப்படுத்தப்படும்போது, அவை பெரும்பா லும் மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. தென்பகுதியில் பழுதடைந்த அல்லது பழைய பேருந்துகளே வடகிழக்கு மாகாணங்களுக்கான சேவைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோன்று, ரயில் போக்குவரத்திலும் இதே நிலையே காணப்படுகிறது.
குறிப்பாக வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் கொழும்புக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பஸ்கள் மிக பழமையான நிலையில் உள்ள பஸ்களே சேவையில் ஈடுபட்டுவருகின்றன. இவை சுமார் 20 வருடத்திற்கும் மேலான சேவை யில் ஈடுபடுத்தப்பட்ட பஸ்களாக காணப்படுகின்றன. இந்த பஸ்கள் கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே பயணிக்க முடியாத நிலையில் உள்ள நிலையில் தூர இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இதேபோன்று இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலைநகர் கொழும்புக்கான நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரங்கள், தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மைச் சமூகத்தவர்களுக்கு அதிகள வில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் உள்ளூர் போக்கு வரத்துச் சேவை வழங்குநர்களும் பயணிகளும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் அப்பிராந்தியப் போக்கு வரத்துச் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்ச்சி யாகக் குற்றம் சாட்டி வருகின்றன. இலங்கையின் தேசியப் போக்குவரத்துத் துறையில் நிலவும் அனுமதிப்பத்திர ஒதுக்கீட்டு நடைமுறைகள் தொடர்பான விவாதங்களில் இது ஒரு முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்ட போதிலும், அவற்றில் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில் பெட்டிகளின் தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அடிக்கடி ஏற்படும் ரயில் தடம்புரளல்கள், தாமதங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட நவீன பெட்டிகளின் பற்றாக்குறை என்பன பயணிகளைப் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்றன. குறிப்பாக, இரவு நேர அஞ்சல் ரயில்களில் அடிப்படை சுகாதார வசதிகள் கூட முறையாகப் பேணப்படுவதில்லை என்பது பயணிகளின் நீண்டகாலக் குறையாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புகையிரதப் பாதை, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக் கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாகும். குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயணத்தை மேற்கொள்ள விரும்பும் சாதாரண பொதுமக்கள், மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இந்தப் புகையிரத சேவை ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகின்றது. அத்துடன், மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களின் விவசாய உற்பத்திப் பொருட்களையும், மீன்பிடிப் பொருட்களையும் நாட்டின் ஏனைய பாகங்களுக்குக் கொண்டு செல்வதிலும் இச்சேவை பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு புகையிரத சேவை, கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. உள்நாட்டு யுத்த காலத்தில் பலத்த சேதங்களுக்கு உள்ளான இந்தப் புகையிரதப் பாதை, யுத்தத்தின் பின்னர் ஓரளவு புனரமைக் கப்பட்ட போதிலும், அது முழுமையான நவீன தரத்திற்கு உயர்த்தப்படவில்லை.
புகையிரதப் பாதையின் நிலைமை ஒருபுறமிருக்க, இச்சேவையில் ஈடுபடுத்தப்படும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் இயந்திரங்களின் தரமும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு நவீன குளிரூட்டப்பட்ட புகையிரதங்களும், சொகுசுப் பெட்டிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்ற போதிலும், மட்டக்களப்பு மார்க்கத்திற்குப் பழைய மற்றும் பழுதடைந்த பெட்டிகளே தொடர்ந்தும் வழங்கப்படுவதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தமிழ் பகுதிகள் என்பதனால் காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வரும் அரசுகள் கவனத்தில் கொள்ளாத அல்லது புறக்கணிப்பு மனநிலை யிலேயே தொடர்ந்து செயற்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக் கப்படுகின்றன.
வடகிழக்கு மாகாணங்களின் பிரதான நகரங்களைத் தாண்டி, கிராமப்புற வீதிகளின் நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பு, கிழக்கின் பின்தங்கிய கிராமங்கள் மற்றும் தீவகப் பகுதிகளில் வாழும் மக்கள் அன்றாடப் போக்குவரத்திற்காகப் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறும் வீதிகளும், உரிய நேரத்திற்கு இயங்காத பேருந்து சேவை களும் மாணவர்களின் கல்வி, நோயாளர்களின் அவசர மருத்துவத் தேவைகள் மற்றும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தல் ஆகியவற்றைக் கடுமை யாகப் பாதிக்கின்றன. மேலும், தீவகப் பகுதிகளுக்கான நவீன படகுச் சேவைகள் மற்றும் இறங்குதுறை அபிவிருத்தி களும் போதிய கவனிப்பின்றியே உள்ளன.
பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும், அவை முழுமையான சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தப்படாமல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்குகின்றன. காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஆகிய இயற்கை துறைமுகங்கள் அமைந் திருந்தும், அவற்றை மையப்படுத்திய நவீன பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக் கட்டமைப்புகள் முழுமை யாகச் செயற்படுத்தப்படவில்லை.
ஒரு நாட்டின் சமச்சீரான அபிவிருத்திக்கு அனைத்து மாகாணங்களுக்கும் சமமான வளப் பகிர்வு அவசியமாகும். வடகிழக்கு மக்களும் இந்நாட்டின் சமவுரிமை கொண்ட பிரஜைகள் என்ற வகையில், அவர்களுக்கும் பாதுகாப்பான, விரைவான மற்றும் நவீன போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான முழு உரிமை உண்டு. எனவே, அரசாங்கமும் போக்குவரத்து அதிகாரிகளும் பிராந்திய ரீதியான பாரபட்சங்களைக் களைந்து, வடகிழக்கின் வீதி, ரயில், கடல் மற்றும் வான்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பு களை நவீனமயப்படுத்தத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அப்பிராந்திய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும்.



