அபிவிருத்திக் குழுவினை கூட்டுவதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்கமுடியும்- இரா.துரைரெட்னம்

மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்திக்குழுவினை கூட்டுவதன் மூலமே தீர்க்கமுடியும் என இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்-இன் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம்,

“கொரேனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்நிலை பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு சுகாதார திணைக்களம் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அனைவரும்  புரிந்துகொண்டு கொரோனா மற்றவர்களுக்குத் தொற்றாமல் இருப்பதற்கான நடைமுறையினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் இயற்கை சூழலை பயன்படுத்தி அதிகளவானோர் தொழில்வாய்ப்புகளை செய்வதன் காரணமாக அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் நிலையுள்ளதனால் ஒருவருக்கொருவர் சந்திக்கும் நிலை அதிகளவில் உள்ளது.

இந்த நிலைமையில் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும். ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

இன்று இந்த கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சுகாதார நடைமுறைகளை பேணுவதனால் அடிமட்டத்தில் உள்ள குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.

கொரோனா காரணமாக சில பகுதிகளில் ஒருவேளை உணவினை உட்கொள்வதற்கே மிகவும் கஸ்டங்களை எதிர்கொள்ளும் நிலையுள்ளது. இதனால் இந்த நிலைமையினை பயன்படுத்தி அவர்களை கையேந்தும் நிலைக்கும் கொண்டுசெல்லக்கூடாது. இந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேற்கொள்வதற்கான ஒரு பொறிமுறையினை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.

மேலும் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இராஜாங்க அமைச்சர்,ஒரு அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடாத்தப்படாமல் இருப்பது என்பது மாவட்ட மக்களுக்கு பல கஸ்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கூட்டத்தினை நடாத்தாதது காரணமாக பல பிரச்சினைகளை தீர்க்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல பிரச்சினைகள் இழுத்தடிப்பு செய்யப்படுவதற்காக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடாத்தமல் இருக்கின்றதா என்ற சந்தேகமும் இன்று எழுகின்றது என்றார்.