அன்னை அம்பிகைக்கு ஆதரவாக இலண்டனில் போராட்டம்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி வேண்டி லண்டனில் அம்பிகை செல்வகுமார் மேற்கொண்டுள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 15 ஆவது நாளான இன்று, அவருக்கு ஆதரவு தெரிவித்தும் அவரின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் இன்று  இலண்டனில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காவல்துறையினரின் பாரிய கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பொதுமக்கள் தமது உரிமைக்காக குரல் கொடுத்து அடக்குமுறைகளுக்கு எதிரான  தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி இலண்டனில் உள்ள திருமதி அம்பிகை செல்வகுமார் கடந்த மாதம் 27 ஆம் திகதியில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

இந் நிலையில் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் இணைந்து அவருக்கு ஆதரவான போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர். இலண்டன் நேரம் 12 மணிக்கு ஆரம்பமாகிய போராட்டம் , 3 மணிவரை இடம்பெற்றது.

கொரோனா  சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப் பட்டுக்கொண்டிருந்த  இப் பேரணியில் திடீரென வந்த  காவல்துறையினர் பொதுமக்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தினர்.

சிலரை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போது  காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர்  காவல்துறையினர்  பகுதி பகுதியாக பொதுமக்களை பிரித்து விசரணைகைளை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் 3 மணியளவில் போராட்டக்காரர்கள் தமக்கான  உறுதி உரையுடன் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர். என்றுமில்லாத வகையில் இம்முறை  காவல்துறையினரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.