அனைத்து அரசியல் கைதிகளையும்  விடுதலை செய்ய வேண்டும்- செல்வம் அடைக்கலநாதன்  

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரை விடுதலை செய்தமைக்கு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி கூறுவதோடு மேலும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவில் விடுதலை செய்வதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன். அதற்காக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி கூறிகின்றேன்

 மேலும் அனைத்து சிறைகளிலும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் விரைவாக விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த 16  அரசியல் கைதிகள் கைதிகளின் விடுதலை என்பது அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் கண்ணீருக்கும் காத்திருப்புகளுக்கும் கிடைத்த பரிசு என்றே நான் கருதுகின்றேன்.

இதே நேரம் விடுதலை செய்யப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியல் வெளியாகியிருக்கின்றது.

இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், மாத்தளை பகுதியை சேர்ந்த ஒருவருமான 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.