அணிவகுப்புக்குத் தயாரான இரு கடற்படையினருக்கு கொரோனா: இன்றைய நிகழ்வுகள் ரத்து?

சிறிலங்கா அரசாங்கத்தினால் இன்று இராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளின் அணிவகுப்புக்கான பயிற்சிகளில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்றைய அணிவகுப்பு ரத்தாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படை சிப்பாய்களுக்கு முதலில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மற்றுமொரு பரிசோதனையை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவிக்கின்றார்.

இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் முதலில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன், இரண்டாவது பரிசோதனைகளில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளமை அறிந்ததே. குறித்த வெற்றி கொண்டாட்ட பயிற்சிகளில் ஈடுபட்ட கடற்படையினர், சுமார் ஒரு மாத காலம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்பட்டதன் ஊடாக அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால் குறித்த இரண்டு சிப்பாய்களையும் மீண்டும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த இரண்டு கடற்படை சிப்பாய்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார மேலும் தெரிவிக்கின்றார்.

இதேவேளை இந்த நிலைமையின் கீழ் இராணுவ வெற்றிவிழா அணிவகுப்பு இன்று நடக்கும் சாத்தியம் இல்லையென அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.