அச்சுறுத்தி பணியவைக்கும் முயற்சிக்கு இடமளிக்கமாட்டேன் – மணிவண்ணன் திட்டவட்டம்

பொலிஸாரின் அச்சுறுத்திப் பணியவைக்கும் கேவலமான அராஜகச் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், நகரின் தூய்மையைப் பேண நடவடிக்கை எடுத்தது அவர்களின் பார்வையில் தவறென்றால் அதே தவறைத் தொடர்ந்து செய்வோம் எனவும் கூறினார்.

சட்டம் ஒழுங்கின் பிரகாரமும் மாநகர சபைக்கும் அதன் முதல்வருக்கும் இருக்கும் அதிகாரத்தின் பிரகாரமே நான் தூய்மைச் செயற்பாடுகளை முன்னெடுக்கக் காவல் பணியாளர்களை நியமித்தேன். இந்நிலையில் மாநகர சபையில் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற கேவலமாக செயற்பாடே எனது கைது எனவும் மணிவண்ணன் தெரிவித்தார்.

பயங்காரவாத குற்றத்தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் நேற்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் தனது சார்பாக சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றம் முன்பாக செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“என்னை யாழ்.பொலிஸ் நிலையம் அழைத்த பொலிஸார் நீண்ட நேரம் விசாரணை செய்தனர். பின்னர் அதிகாலை 2 மணி அளவில் உங்களைக் கைது செய்து பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கிறோம் எனத் தெரிவித்தனர். பின்னர் என்னை வவுனியா கொண்டு சென்று தடுத்து வைத்து வாக்கு மூலம் பெற்றனர்.

மாநகர சபை பணியாளர் நியமனம் மற்றும் அவர்களின் சீருடை விடயத்தில் புலிகளை மீள் உருவாக்கம் செய்வதாக என் மீது குற்றச்சாட்டப்பட்டது. மாநகர சபையின் சட்டவரம்பின் கீழ் செயற்பட்டது பயங்கரவாதமா? வாக்குமூலத்தின் பின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் என் மீது வழக்குப் பதிவு செய்யாமல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மாநகர சபையின் சுயாதீன செயற்பாடுகளில் செயற்படுகின்ற எந்த அதிகாரமும் பொலிஸாருக்கு இல்லை. பொலிஸாரின் இவ்வாறான அராஜக செயற்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து சட்ட ரீதியாகப் போராட நான் தயார். பொலிஸ் அராஜகத்தை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. எனக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட அனைத்து சட்டத்தரணிகளுக்கும் நன்றி. வவுனியா வந்த சட்டத்தரணிகள், எனது விடுதலைக்காக குரல் எழுப்பிய எனது ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்” என்றார்.