வீதியோரத்தில் கூட போராட முடியாத அவலம் – கனகரஞ்சனி

870 Views

வீதியில் கூட நாம் போராட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டோம். முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்களை கொடுத்து பத்தாண்டுகளாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் கூறுமாறு கோருகின்றோம் என வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் கிளிநொச்சி இணைப்பாளர் கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது உரிமைகளை வழங்குமாறு கோரி நின்ற எம்மீது தொடுக்கப்பட்ட போர் எங்களின் உறவுகளையும், உடமைகளையும், இல்லாதொழித்தது.

இதனை விட போரின் ஈற்றில் எமது உறவுகளை நாம் எமது கைகளாலேயே ஒப்படைத்தோம். சரணடைவதை நேரில் கண்டோம். அனைத்துக்கும் சாட்சிகள் உள்ளன. ஆனால் இன்று வரையில் அந்த உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை எம்மால் அறிய முடியாதுள்ளது.

நாம் தேடாத இடங்கள் இல்லை. பார்க்காத நபர்கள் இல்லை. ஆனால் எம்மை அவ்வப்போது சமாதானப்படுத்தும் கதைகள் கூறப்பட்டதோடு ஆணைக்குழுக்களும் நிறுவப்பட்டு கால இழுத்தடிப்புத்தான் செய்யப்பட்டது. தற்போது வரையில் எமது உறவுகளை காணாது கண்ணீருடன் காத்திருக்கின்றோம்.

எமது வாக்குகளைப் பெற்று எமக்கு தீர்வளிப்பதாக கூறிய தலைமைகளும் ஜெனீவாவிற்குச் சென்று எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்க எமது அனுமதியைப் பெறாது அரசாங்கத்திற்கு சாதகமாக தலை அசைத்துவிட்டு வந்துவிட்டார்கள்.

தலைமைகளை நம்பி ஏமாந்து விட்டோம். எமக்கான கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கு நாமே போராட்டங்களை தொடராக முன்னெடுத்தோம்.

ஆனால் நாட்டின் நிலைமை அதனையும் முடக்கும் சிந்தனையாளர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதாகவே இருக்கின்றது. வீதியில் கூட நாம் போராட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டோம். முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்களை கொடுத்து பத்தாண்டுகளாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் கூறுமாறு கோருகின்றோம்.

இதனை சர்வதேசம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எமது நியாயமான கோரிக்கைக்கு தலைசாய்க்க வேண்டும். சர்வதேசம் இனியாவது எமக்கான நியாயத்தினை நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

Leave a Reply