5 கோரிக்கைகள் 12 நாட்கள் 24 வயதை எட்டாத இளைஞன் .! 39-வது ஆண்டு — தியாகி திலீபனின் மீள் நினைவலைகள்.! : பா.அரியநேத்திரன்

தியாகதீபம் திலீபன் இந்தியப் படைகளின் கெடுபிடி களுக்கு எதிராக வைத்த ஐந்து கோரிக்கைகள்..
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங் களில் திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும் தடுத்து வைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலை யங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த ஐந்து கோரிக்கைகளுடன் உண்ணாவிரதம் ஆரம்பிப் பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 13.09.1987ல் இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அந்தக் கோரிக்கை மகஜர் அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு கேட்கப்பட்டது. மறுநாள் 14.09.1987 வரை எந்தப் பதிலும் கிடைக்காத காரணத்தால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் தீர்மானித்தனர். தலைவர் பிரபாகரனும் தமது நிலை மையை விளக்கி இந்தியத் தூதுவர் தீட்சித்துக்குக் கடிதம் அனுப்பினார். அதை பொருட்படுத்தவில்லை.
அதனால் (15/09/1987 தொடக்கம் 26/09/1987 வரை) உண்ணா விரதம் ஆரம்பமானது.
01ம் நாள், 15.09.1987, செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்தில் உண்ணாவிரத மேடையில் திலீபனின் தாய் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால் அங்கு வந்த ஒரு தாய், விபூதியை நெற்றியில் பூசினார். விடுதலைப் புலிகளின் தளபதி மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே ஏனைய போராளிகளான மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர். அன்று இரவு 11 மணிக்கு தலைவர் பிரபாகரன், திலீபனைப் வந்து பார்த்தார். அவருடன், போராளிகளான சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர்.
02ம் நாள், 16.09.1987, புதன்கிழமை திலீபன் தானே முகத் தைக் கழுவி தலைவாரிக் கொண்டார், சிறுநீர் கழித்தார். மக்கள் ஆயிரக்கணக்கில் நல்லூர் வளாகத்தில் கூடினர். மேடையில் பல கவிதைகள், பேச்சுக்கள் முழங்கிக் கொண் டிருந்ததைக் கேட்ட திலீபன், தானும் பேச வேண்டும், ஒலி வாங்கியைத் தாருங்கள்’ என்றார். ஒலிவாங்கி வழங்கப் பட்டது. அப்போது அவர் கூறிய வார்த்தை..
“அன்பார்ந்த தமிழீழ மக்களே!
என்னால் அதிகம் பேச முடியாது. ஆனாலும் உங்களுடன் பேச வேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை ஒரு சொட்டு நீர்கூட நான் அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்த நாளை எதிர் பார்த்துக் கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேச முடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்’’
அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் தலைவர் பிரபாகரன் உண்ணாவிரத மேடையில் திலீபனுடன் உரையாடினார்.
03ம் நாள், 17.09.1987, வியாழக்கிழமை, “மலம் போகவேணும் போலதான் இருக்கு’ என்றார் திலீபன்.
“இறங்கி வாருங்கள்’ – உதவுகிறார் டாக்டர் வாஞ்சி நாதன்.
“வேண்டாம் விடுங்க… நானே வருகிறேன்.’
சிறுநீர் கழியவில்லை… சிரமப்படுகிறார்.
“தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்’ என்கிறார் டாக்டர்.
“நான் சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன்’ என்றார்.
ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக நல்லூர் கோயில் வளாகம் முழுவதும் மக்கள் வெள்ளம் நிரம்பியது. பாடசாலை மாணவர்கள் பல இடங்களிலும் இருந்து வருகை தந்தனர்.
04ம் நாள், 18.09.1987, வெள்ளிக்கிழமை அப்போது நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24. நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80ம், சுவாசத் துடிப்பு 16-22ம் இருக்க வேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25.
தியாகி திலீபன் ஏற்கனவே 1986இல் நடை பெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டு வயிற்றில் தாக்கியதால் அவருடைய 14 அங்குலக் குடல் அகற்றிச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது.
05ம் நாள், 19.09.1987, சனிக்கிழமை கொழும்பு இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப் போவதாகச் செய்தி கசிந்தது. எவரும் வரவில்லை. கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணா விரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அன்று மாலை யாழ்க்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி னார்.
06ம் நாள், 20.09.1987, ஞாயிற்றுக்கிழமை
விடுதலைப் புலிகளின் தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கினர். அப்போது ‘கிட்டு அண்ணனைப் பார்க்க வேண்டும்’ என திலீபன் சொன்னார். அவர் அப்போது சென்னையில் இருந்தார். அன்று மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்துச் சென்றனர்.
யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளிடம், “உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப் பந்திக்க முடியாது’ என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.
07ம் நாள், 21.09.1987, திங்கள்கிழமை
சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்து படம் பிடித்தனர்.
08ம் நாள், 22.09.1987, செவ்வாய்க்கிழமை
நல்லூர் கோயில் வளாகத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் கூடினர். வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண் ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பில் வெபர் அரங்கில் மதன் என்ற போராளி உண்ணாவிரதம் இருந்தார். வெபர் அரங்கிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இருந்து மக்கள் குவிந்தனர்.
இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலி களைச் சந்தித்தனர். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை.
09ம் நாள், 23.09.1987, புதன்கிழமை
இந்திய அமைதிப் படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ். பல் கலைக்கழக மைதானம் வந்தார். தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப் பட்டு யாழ்க்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சு வார்த்தையில் பலன் எதுவுமில்லை.
தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித், தலைவர் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் விடுதலைப் புலிகள் தரப்பில் மாத்தையா, செ.கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். அதனை செயல் படுத்தவில்லை. உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை.
10ம் நாள், 24.09.1987, வியாழக்கிழமை திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன.
சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்து இரத்த ஓட்டங்களும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம் எனக் கவலை அனைவரிடமும் முகத்தில் எதிரொலித்தது.
நோர்வே, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார் கள். அவர்களால் கூட இந்தியாவை நிர்ப்பந்திக்க முடிய வில்லை.
11ம் நாள், 25.09.1987, வெள்ளிக்கிழமை கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது.
யாழ். மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண் ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. “நிதர்சனம் டிவி’ கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. வடகிழக்கு முழுவதும் ஒருவித துக்கம் தோய்ந்த முகத்துடன் மக்கள் காணப்பட்டனர்.
12ம் நாள், 26.09.1987, சனிக்கிழமை
அந்த இறுதி நிமிடம் திலீபனின் உடல்நிலை மோசமாகி விட்டது என்ற செய்தி யாழ்ப்பாணம் முழுவதும் பரவியது. 12 தினங்கள் (மொத்தம் 265 மணித்தியாலங்கள்) திலீபனின் உயிர் அன்று காலை 10.48 மணிக்குப் பிரிந்தது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவரது உடல் நிலையை கண்காணித்து, அவர் மறைந்த பிறகு அவரது உடலைப் பரிசோதித்து மரணத்தை 1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48 மணிக்கு வைத்தியர் சிவகுமார், தியாகி திலீபனுடைய நெஞ்சில் இதயத்துடிப்பு மானியை (ஸ்டெதாஸ்கோப்) வைத்துப் பரிசோதித்து, சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு நின்றுவிட்டதை உறுதி செய்துவிட்டு, தியாகி திலீபனின் பாதங்களைத் தொட்டு வணங்கி தனது இறுதி முடிவை கவலை தோய்ந்த முகத்துடன் அறிவித்தார்.
எங்கும் அழுகை… விம்மல்… இலங்கை, இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது. பிரேதப் பாதுகாப்புக்காக (எம்பார்ம்) யாழ். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், 1987 செப்டம்பர் 26, பிற்பகல் 4.15 மணி தொடக்கம் 1987 செப்டம்பர் 28, பி.ப. 04 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தலைவர் மேதகுவால் தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தி, லெப். கேணல் என்ற விருது வழங்கப்பட்டது.
1987 செப்டம்பர் 28 அன்று பி.ப. 4.30 மணியளவில் அவருடைய விருப்பம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் முறைப்படி புகழ் உடலம் கையளிக்கப்பட்டது.