வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு உதவுவது குறித்து கலந்துரையாடல்

46 Views

வியட்நாமில் உள்ள 303 இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கவிருப்பதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அவ்வமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான விரிவான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

வியட்நாம் கடற்பகுதியில் கடந்த 8 ஆம் திகதி மீட்கப்பட்ட 303 இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கவிருப்பதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

ஹனோயிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை மற்றும் வியட்நாம் அரசாங்கங்கள், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் முகவரகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைவை ஏற்படுத்தி சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் ஏற்ப இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான உதவிகளும் பாதுகாப்பும் வழங்கப்படுமென அவ்வமைப்பு தெரிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கிளையின் தலைவர் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் இந்தியா, பூட்டான் ஆகிய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வியட்நாமில் உள்ள 303 இலங்கைக் குடியேற்றவாசிகள் விவகாரத்திற்குத் தீர்வுகாணல், அதில் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக் குடியேற்றவாசிகளுடன் நிகழ்நிலை முறைமையின் ஊடாகத் தொடர்புகொள்ளல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply