பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்த அரசும் நீக்கப்போவதில்லை-ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா 

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால்  மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வுக்கான இந்த வாரம் வழங்கிய நோ்காஒலின் முக்கியமான பகுதிகள் சிலவற்றை “இலக்கு” வாசகா்களுக்குத் தருகின்றோம் .

கேள்வி – பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ச்சியாக உள்நாட்டிலும் சா்வதேச அரங்கிலும் முன்வைக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கமும் அதனை மாற்றியமைப்பதாகச் சொல்லிக்கொள்கின்றது. அதனை அரசாங்கம் செய்யும் என எதிா்பாா்க்க முடியுமா?

பதில் – இந்தச் சட்டம் 1979 ஆம் ஆண்டு 48 ஆவது இலக்கச் சட்டமாக இது கொண்டுவரப்பட்டது. இது ஒரேநாளில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் சட்டமா அதிபா் சிவா பசுபதிதான் இதனை வரைந்தவா். அப்போது நீதி அமைச்சராக இருந்தவா் டபிள்யு தேவநாயகம். இச்சம்மூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள எம்.பி.க்கள் இதற்கு எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆதரவும் தெரிவிக்கவில்லை. அதிலிருந்து விலகிநின்றாா்கள்.

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இந்த ஜூலை மாதத்துடன் 43 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. இருந்தபோதிலும் இந்தச் சட்டம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. எந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக 2009 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும், இந்தச் சட்டம் இப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது சிங்கள, முஸ்லிம் தலைமைத்துவங்கள் கூட இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொரோடவாக இருந்த மைத்திரிபால சேனாநாயக்க மட்டும் இதனை எதிா்த்து வாக்களித்தாா்.

போா் முடிவடைந்த பின்னா் 2017 க்குப் பின்னரும் விடுதலைப் புலிகளை மீளுருவாக்குகின்றாா்கள். அதற்கு ஆதரவாக முகநுாலில் பதிவிடுகின்றாா்கள் எனக்கூறப்பட்டு பலா் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்கள். அவா்கள் சிறைச்சாலைகளில் வாடுகின்றாா்கள்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த சட்டமூலத்தை முற்றாக நீக்குவாா்கள் என எதிா்பாா்க்க முடியாது. இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பெயா் மாற்றப்படலாம். 2015 இலும் இவ்வாறான ஒரு முயற்சி நடைபெற்றது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என அவா்கள் ஜெனீவாவில் வாக்குறுதியளித்திருந்தாா்கள்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நடைபெற்ற “நல்லாட்சி“யில் இதனை மாற்றியமைப்பதாகக் கூறிவிட்டு பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் என்ற பெயரிலான சட்டம் ஒன்றைத் தயாரித்தாா்கள்.

இந்த சட்டமூலத்தை வெளிப்படையாகப் பாா்க்கும் போது, நெகிழ்வுத் தன்மையுள்ளதாகவே தோன்றும். ஆனால், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அது பயங்கரவாதத் தடைச்சட்டத்தைவிட மோசமானதாக இருந்திருக்கும். ஏனெனில், “நான் போராட்டம்  நடத்துவேன்” எனக் கூறும் ஒருவரைக்கூட இந்தச் சட்டமூலத்தின் கீழ் கைது செய்ய முடியும்.  அந்தளவுக்கு மோசமான இந்தச் சட்டம் மாற்றுப்பெயா் ஒன்றில் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டது. தமிழா் தரப்பிலிருந்து இதற்கு யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனை எதிா்த்தவா்கள்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விமல் வீரவன்சவும்தான்.

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் இதனை கிடப்பில் போட்டாா்கள். அது வரவேற்றப்படவேண்டிய ஒரு செயல். ஏனெனில் அந்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்திருந்தால் இதனைவிட மோசமாகப் போயிருக்கும். ஒரு பெண்ணைக்கூட ஆண் பொலிஸாரால் கைது செய்ய முடியும். அதனுடைய கொடூரத் தன்மை குறித்து நீண்ட பட்டியல் ஒன்றே உள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாது என நான்கூறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இலங்கையில் ஒருவரை கைது செய்து தடுத்துவைத்து விசாரணை செய்வதற்காக இருக்கின்ற ஒரேயொரு சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டம்தான். இந்தச் சட்டத்துக்கு கீழ்தான் தடுப்புக்காவல் உத்தரவை வழங்க முடியும். இதன்கீழ் ஒருவரை 12 மாதங்களுக்கு தடுத்துவைத்திருக்க முடியும். இது முன்னா் 18 மாதங்கள் என இருந்தது. இவ்வளவு காலத்துக்கு ஒருவரைத் தடுத்துவைத்து விசாரணை செய்ய வேண்டுமாக இருந்தால் நடைமுறையில் உள்ள ஒரேயொரு சட்டம் இந்த பயங்கரவாத தடைச்சட்டம்தான்.

எனவே இந்த அரசுக்கு அது தேவைப்படுகின்றது. எந்த அரசு வந்தாலும் இதனை நீக்குவாா்கள் என்பதை எதிா்பாா்க்க முடியாது. ஏனென்றால், ஈஸ்ட்டா் தாக்குதலுக்குப் பின்னா் முஸ்லிம் இளைஞா்களை கைது செய்து விசாரணை செய்யவும், இப்போது அரகலய போராட்டத்தின் பின்னா் சிங்கள இளைஞா்களைக் கைது செய்து தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கும் இந்தச் சட்டம்தான் பயன்படுத்தப்படுகின்றது. தங்களுக்கு பாதிப்பு வருகின்றது என்பதற்குப் பின்னா்தான் இந்த சட்டமூலத்துக்கு எதிராக சிங்கள மக்கள் கையொப்பம் வைக்கின்றாா்கள். ஆக, இந்தச் சட்டமூலத்துக்குப் பெயா் மாற்றப்படலாமே தவிர, இந்தச் சட்டமூலம் நீக்கப்படாது என்பதே எனது அனுபவத்தில் நான் அறிந்துகொண்டது.

கேள்வி –  பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கம் ஒன்றை காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை முன்னெடுத்தது. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக இது அமைந்திருந்ததா?

பதில் – நிச்சயமாக இந்தப் போராட்டத்தின் மூலமாக அரசாங்கத்துக்கு எந்தவிதமான அழுத்தங்களும் கொடுக்கப்படவும் இல்லை. கொடுக்கப்படவும் மாட்டாது. 2009 இல் போா் முடிவடைந்த போது இதனைச் செய்திருக்க வேண்டும். 2017 இல் முகநுாலில் பதவிட்டாா்கள் என்பதற்காக நுாற்றுக்கணக்கான இளைஞா், யுவதிகள் கைது செய்யப்பட்டபோது இதனைச் செய்திருக்க வேண்டும். அப்போது அதற்கு எதிராக யாரும் பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கவும் இல்லை. வெளிப்படையாக எதிா்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. ஆனால் இப்போது தெற்கில் அரகலய என்ற பெயரில் போராட்டம் ஆரம்பமான பின்னா்தான் இவா்கள் இந்த கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளாா்கள். ஆக, இந்தக் கையெழுத்துப்போராட்ம் தங்களையும் ஏமாற்றி மக்களையும் திசைதிருப்பும் செயற்பாடே தவிர, இந்தச் செயற்பாட்டினால் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்பது ஒருபோதும் நடைபெறப்போவதில்லை. சில அரசியல்வாதிகள் தமது விளம்பரத்துக்காக இதனைச் செய்யலாமே தவிர, இதன்மூலமாக அரசுக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்க முடியாது என்பதே உண்மை.

கேள்வி – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான பல வழக்குளை முன்னெடுத்தவா் என்ற முறையில், இந்த சட்டத்திலுள்ள மிகவும் மோசமான அம்சங்களாக எவற்றைக் குறிப்பிடுவீா்கள்?

பதில் – இந்த சட்டத்திலுள்ள மிக மோசமான அம்சங்கள் என மூன்று விடயங்களை குறிப்பிடலாம். முதலாவது கைது செய்யப்படும் ஒருவரை 18 மாதங்களுக்குத் தடுத்துவைத்து விசாரணை செய்ய முடியும். யாரைக் கைது செய்தாலும் அவ்வாறு தடுத்துவைக்க முடியும்.

இரண்டாவது, கைது செய்யப்பட்ட ஒருவா் தொடா்பில் குறிப்பிட்ட காலத்துக்குள் அவா் மீதான விசாரணையை முடித்துவிட வேண்டும் என்ற ஒரு வரையறை இந்தச்சட்டமூலத்தில் இல்லை. இதனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான ஒருவரை விசாரணைகள் எதுவும் இல்லாமலே பலவருடங்களுக்குத் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும். விசாரணை முடிவடைந்தாலும் வழக்குத் தாக்கல் செய்யாமல் மேலும் காலம் தாழ்த்தப்படலாம். கைதான பலா் 20-25 வருடங்கள் என சிறையில் வாடுவதற்கு இதுதான் காரணம்.

மூன்றாவதாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகும் ஒருவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. சட்டமா அதிபா் சம்மதம் தெரிவித்தால் மட்டும்தான் பிணை வழங்க முடியும். அதாவது பிணை வழங்கும் அதிகாரம் நிா்வாகத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, நீதித்துறைக்கு அது இல்லை. இந்த விடயங்கள்தான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கொடூரமான அம்சங்கள்.