விமானப்படையின் ஜெட் விமானத்தில் மாலைதீவுக்கு தப்பினார் கோட்டாபய ராஜபக்ச

225 Views

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, இன்று அதிகாலை தனது பாரியார் சகிதம் நாட்டிலிருந்து வெளியேறினார்.

இலங்கை விமானப்படைக்கு உரித்தான அன்ரனோவ் ஜெட் விமானமொன்றில், இரு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் அவர் மாலைதீவு நோக்கி சென்றடைந்தார் என பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைதீவு தலைநகரான மாலேயிலுள்ள விமான நிலையத்தை சென்றடைந்த கோட்டாபய ராஜபக்ச, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார் என மாலைதீவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவிலிருந்து கோட்டாபய ராஜபக்சவும், அவரின் பாரியாரும் அமெரிக்கா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அமெரிக்க குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த குடியுரிமையை துறந்தார்.

‘ஜனாதிபதி’ என்ற பதவி நிலை அந்தஸ்த்தையும் அவர் இன்று இராஜினாமா செய்கின்றார். இவ்வாறான பின்புலத்தில் அமெரிக்கா சென்றால் தனக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சமும் கோட்டாவை சூழ்ந்துள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாடு பறக்க முன்னர், தனது பதவி விலகல் கடிதத்தில் கோட்டாபய ராஜபக்ச கையொப்பமிட்டார் எனவும், இராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் இன்றைய தினத்துக்குள் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி ஜுலை 13 ஆம் திகதி பதவி விலகுவார் என்ற அறிவிப்பை கடந்த 9 ஆம் திகதி சபாநாயகர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply