விடுதலைப் புலிகள் குறித்த சுவிஸ் நீதிமன்றத் தீர்ப்பிற்கு சீமான் வரவேற்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் கூறும் போது,

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பல்ல எனத் தீர்ப்பு வழங்கியுள்ள சுவிற்சர்லாந்து நாட்டின் குற்றவியல் நீதிமன்றம், இயக்கத்திற்கு நிதி சேகரித்தமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 12பேரையும் வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்திருப்பது மனமகிழ்ச்சியையும், பெரும் நம்பிக்கையையும் தருகின்றது. உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எந்நாளும் போற்றி வணங்கக்கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாக இது அமைந்துள்ளதென்றால், அது மிகையாகாது.

எம்மினத்தின் மீதான வரலாற்றுப் பழியைத் துடைக்கும் விதமாக தீர்ப்பளித்து நீதியை நிலைநாட்டியுள்ள சுவிற்சர்லாந்து நாட்டிற்கும், அந்நாட்டின் நீதித்துறைக்கும் எனது மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இத்தகைய தீர்ப்பைப் பெற வழக்கில் முன்னின்று உழைத்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகின்றேன்.

இதேபோன்று, தொடர்ச்சியாக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீத்யாகவும் போராடி, உலக நாடெங்கும் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலகிள் இயக்கத்தின் மீதான தடைச் சங்கிலியைத் தகர்த்தெறிய உறுதியேற்போம் “ இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.