‘வாழ நினைத்தால் வாழலாம்’ ( உள்ளம் திறந்து உரையாடுவதன் அவசியம்)

506 Views

‘வாழ்க்கை ஒரு ரோஜா மலர்ப்படுக்கை அல்ல’ என்பது ஆங்கில மொழியில் உள்ள ஒரு பழமொழி. நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்க்கையிலே பலவிதமான அனுபவங்களைச் சந்திக்கின்றோம்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் நாங்கள் வாழ்க்கையில் வெற்றிகளைச் சந்திக்கின்றோம். வேறு சில சந்தர்ப்பங்களில் இழப்புக்களையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்கின்றோம். வெற்றிகளைச் சந்திக்கும் போது, மகிழ்ச்சிக்கடலில் திளைக்கின்ற நாங்கள், தோல்விகளைச் சந்திக்கின்ற போது அந்தத் தோல்விகளின் தாக்கத்தினால் சோர்ந்து, துவண்டு விடுகிறோம். இருப்பினும் எமது சொந்தப்பலத்தின் காரணமாகவோ, அல்லது எமது உறவுகள், நண்பர்கள் ஆகியோர் தருகின்ற ஆதரவின் காரணமாகவோ இப்படிப்பட்ட எதிர்மறை அனுபவங்கள் தருகின்ற எதிர்மறை உணர்வுகளிலிருந்து எம்மை விடுவித்துக்கொண்டு எமது வாழ்க்கையை எதிர்கொள்ள நாம் மீண்டும் தயாராகி விடுகிறோம்.

ஆனால் இழப்புக்களையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்கும் எல்லோருமே அந்த அனுபவங்களிலிருந்து மீண்டு எழுவதில்லை. அதற்கு மாறாகத் தாங்கள் சந்திக்கின்ற துன்பங்களைத் தாங்கமுடியாது, வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக நம்பிக்கை இழக்கின்ற நிலைக்கு இவர்கள் வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுள் ஒரு சிலர் தமது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நிலைக்குக்கூட தள்ளப்படுகிறார்கள்.

தற்கொலை செய்வது என்பது இன்று ஒரு முக்கிய சமூகப்பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. அதிலும் முப்பதாண்டு காலப் போரிலே பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிற எமது தாயக மக்கள் நடுவில், தற்கொலை ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருவதை உற்றுநோக்கக் கூடியதாகவிருக்கிறது.

தற்கொலை முயற்சிகளுக்கும் உளநோய்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலவிதமான உளநோய்களுக்கு உள்ளானவர்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி எடுக்கின்ற போதிலும் ‘உளச்சோர்வு’ (depression) என்னும் உளநோயால் பாதிக்கப்படுபவர்களே அதிகமாகத் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவர் உளச்சோர்வுக்கு உள்ளாகின்ற போது, எதிர்மறையான எண்ணங்கள் அவரது உள்ளத்தை ஆக்கிரமிக்கின்றன. இப்படிப்பட்டவர்கள் தங்களையே வெறுக்கின்ற நிலைக்கு உள்ளாகின்றார்கள். தாங்கள் ‘வாழத்தகுதியற்றவர்கள்’ என்ற சிந்தனை இவர்களில் மேலோங்குவதை அவதானிக்கலாம். அதுமட்டுமன்றி வாழ்க்கையில் இவர்களுக்கு வழமையாக இருக்கும் ஆர்வமும் உற்சாகமும் இல்லாமல் போய்விடுகின்றது. தமது நாளாந்த செயற்பாடுகளைச் செய்வதில் இவர்கள் ஆர்வமிழக்கிறார்கள். அடுத்தவர்களின் செயற்பாடுகள் இவர்களுக்கு எரிச்சலூட்டும் நிகழ்வுகளாக மாற்றமடைகின்றன. இப்படிப்பட்டவர்கள் அதிகமாகத் தனிமையை நாடுபவர்களாக இருப்பார்கள். உளச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நித்திரை கொள்வது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும். ஒன்றில் இவர்கள் நித்திரை கொள்ள முடியாமல் தவிப்பார்கள். அல்லது மிக நீண்ட நேரம் நித்திரை கொள்ளத் தூண்டப்படுவார்கள்.

எதிர்மறையான எண்ணங்கள் உளச்சோர்வு உள்ளவர்களை அதிகமாக ஆட்கொள்கின்ற காரணத்தால், படிப்படியாக வாழ்க்கையில் முற்று முழுதாக நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறாக வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கின்ற போது ஒரு சில நேரங்களில் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கும் இவர்கள் சென்று விடுகிறார்கள்.

உலகிலுள்ள எல்லாச் சமூகங்களிலுமே உளநோயால் பாதிக்கப்படுவதை ஒரு ‘களங்கமாகப்’ (stigma) பார்க்கும் தன்மையைக் காணக்கூடியதாக இருக்கிறது. எமது தமிழ்ச் சமூகத்தின் நிலையை ஆய்ந்து பார்க்கின்ற போது, உளநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை ‘களங்கப்பட்டவர்கள்’ என்ற மனநிலையில் பார்க்கும் பண்பு மிக அதிகமாக இருப்பதை மறுத்துவிட முடியாது.

உளநோய்களால் பாதிக்கப்படுபவர்கள் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவதன் காரணமாக, உளநோய்களின் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் தமது உளநோய்கள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்குவது மட்டுமன்றி, அந்நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ளத் தவறியும் விடுகிறார்கள்.

உடல் நோய்களைப் போலவே உளநோய்களும் ‘இயற்கையானவை’ என்ற மனப்பாங்கு எமது சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். எமக்கு உடல் நோய்கள் ஏற்படுகின்ற போது எந்தவித தயக்கமும் இன்றி மருத்துவரை நாடி எமது நோய்களுக்கான நிவாரணத்தை நாம் பெற்றுக்கொள்கிறோம். அது போலவே உளநோய்களால் நாம் பாதிக்கப்படும் போது எந்தவித தாமதமும் இன்றி அந்நோய்களுக்கான சிகிச்சையைப் பெற நாம் முன்வர வேண்டும்.

எமது தாயகத்தில் முப்பதாண்டு காலம் நீடித்த போரிலே எமது மக்கள் ஏராளமான தங்கள் உறவுகளை இழந்திருக்கிறார்கள். பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்திருக்கிறார்கள். பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்னும் பலர் தமது உறவுகள் விமானத் தாக்குதல்களாலும், எறிகணை வீச்சுக்களாலும் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை நேரிலே பார்த்ததோடு, அவற்றினால் ஏற்பட்ட உளத்தாக்கங்களில் இருந்து இன்னுமே மீள முடியாத நிலையில் இருக்கிறார்கள். இன்னும் பலர் போரின் இறுதிக்கட்டத்திலே தமது உறவுகளை அரச படைகளிடம் ஒப்படைத்துவிட்டு, இன்று அவர்கள் அத்தனை பேரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சூழலில், கண்ணீரோடும், கவலையோடும் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

மேலும், தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் பல ஆண்களும், பெண்களும் சிறீலங்காப் பாதுகாப்புப் படைகளினால் பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உடலிலும் உள்ளத்திலும் ஆறாத காயங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களிலே பலர் படையினரால் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

எமது மக்கள் நடுவில் தற்கொலை முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் என்றால், எமது மக்கள் மத்தியில் தற்கொலை தொடர்பாகவும் உளநோய்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும். பாடசாலைகளிலும் உளநோய்கள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். இன்னும் குறிப்பாக எமது சமூகங்களில் உளநோய்களால் பாதிக்கப்படுபவர்களை இழிவாகப் பார்க்கும் மனப்பாங்கிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.

உளநோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இன்னும் குறிப்பாக உளச்சோர்வு நோயினால் பாதிக்கப்படுபவர்களை இனங்கண்டு, அவர்கள் விரைவான சிகிச்சையைப் பெறக்கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டும். இன்னும், நாங்கள் உளநோய்களால் பாதிக்கப்படுகின்ற போதோ அல்லது எமது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறையான அனுபவங்களின் காரணமாக நாங்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகின்ற போது எமது பிரச்சினைகளை எமக்குள்ளே மறைத்து வைக்காது அவற்றை வெளிப்படையாகக் கதைக்கின்ற நிலைக்கு நாம் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன் வழமையாக எல்லோருடனும் இயல்பாக உறவாடுகின்றவர்கள், திடீரெனத் தம்மைத் தனிமைப்படுத்துகின்ற போது, அப்படிப்பட்டவர்களை அணுகி, அவர்கள் அந்த நிலையிலிருந்து வெளியே வர நாம் ஆவன செய்ய வேண்டும்.

எமது உணர்வுகளை நாம் கையாளும் முறையிலேயே எமது உளநலம் பெருமளவில் தங்கியிருக்கின்றது என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எமது உள்ளத்தில் எதிர்மறையாள உணர்வுகள் ஏற்படும் போது அப்படிப்பட்ட உணர்வுகளை எமக்குள்ளே நாம் அமுக்கிப் புதைத்துவிடாது, அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இனங்கண்டு அவற்றை உரிய முறையில் வெளிப்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக எமது உள்ளத்தைப் பாதிக்கின்ற அனுபவங்களையும், அவை தொடர்பான உணர்வுகளையும் நம்பிக்கைக்குரிய ஒருவருடன் பகிர்ந்துகொள்வது அந்த உணர்வுகளிலிருந்து வெளிவர எமக்குத் துணை செய்யும். மேலும் உளரீதியாகவோ அன்றேல் உணர்வு ரீதியாகவோ நாம் அதிகமாகப் பாதிக்கப்படும் போது அதற்கு உரிய ‘உளவளத்துணை’ (counseling) உதவியைப் பெற்றுக்கொள்வது சாலச்சிறந்ததாகும்.

எமது உணர்வுகளை நாம் துல்லியமாக இனங்காணக் கற்றுக்கொள்வதுடன், எம்மைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் தன்மையை நாம் எம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் தமது பிரச்சினைகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளும் போது அவர்களை அலட்சியப்படுத்தாமல் அவர்களது பிரச்சினைகளை அவதானமாகக் கேட்டு, அவர்கள் தம்மிலே எப்படிப்பட்ட உணர்வுகளை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். இதனையே காள் றொஜர்ஸ் (Carl Rogers) என்ற உளவியலாளர் ‘ஒத்துணர்வு’ (Ecpathy) எனப் பெயரிடுகின்றார். ஒட்டுமொத்தமாக நோக்கும் போது எமது உணர்வுகளை சரியாக இனங்காண்பதும், அடுத்தவரின் உணர்வுகளை துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றுக்கு மதிப்பளிப்பதும் உறவுகளை வளர்க்கக்கூடிய ஊடகமாகும். மனிதர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ளப்பட்டு அன்புசெய்யப்படும் போது ‘வாழவேண்டும்’ என்ற ஆவலும் வாழ்க்கையில் ‘புதிய நம்பிக்கையும்’ அவர்களில் நிச்சயமாக ஊற்றெடுக்கும்.

– ஜெயந்திரன் –

Leave a Reply