நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் (நிமதீ) நீதிபதி, கொலம்பியாவை சேர்ந்த அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ, வன்னி முள்ளிவாய்கால் பத்தாம் ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டார். அதை ஒரு ஆழமான அனுபவமாக இவர் விபரித்தார். இனவழிப்பால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆய்வு செய்யும் அருட்தந்தை ஜாவியர், ஜெர்மனியின் பிரேமன் நகரில் 2013 டிசம்பரில் அமர்ந்த நிமதீயின் பன்னிரண்டு நீதிபதிகளில் ஒருவர்.
ஈழத்தமிழர் அடையாளத்தையும் ஏற்றுக்கொண்டு நிமதீ ஈழத்தமிழர் இனவழிப்பு ஒரு தொடரும் இனவழிப்பு என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும். அத்துடன் முள்ளிவாய்கால் ஈழத்தமிழர் இனவழிப்பு நினைவுகூரல் உலகமயமாக்கப் பட வேண்டும் என்றும் நிமதீ முன்மொழிந்துள்ளது. இன்று லத்தீன் அமெரிக்காவிலிருந்து கிழக்கு ஆசியா வரை மே-18 நினைவுகூரல் பரவிவருவதும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஐநா மனித உரிமை கவுன்சில் ஈழத்தமிழர் இனவழிப்பை கருத்திலெடுக்காதது சிறிலங்கா அரசை பாதுகாப்பதாகவே முடிந்துள்ளது என்று விபரித்தார் அருட்தந்தை ஜாவியர். லத்தீன் அமெரிக்காவின் சில இடதுசாரி அரசுகளும் கூட இந்த அரசுகளின் கூட்டு அரசியலுக்கு பலியாகியது கவலைக்கிடமானது என்று இவர் கூறினார்.
நேர்மையான ஈழத்தமிழர் உரிமை போராட்டம் நீண்ட கடினமான போராட்டம் தான். ஆனால் பல சர்வதேச கூட்டொருமை அமைப்புக்கள் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன. முள்ளிவாய்கால் பத்தாம் ஆண்டு நிகழ்வு ஈழத்தமிழர்களின் போராட்ட உறுதியை வெளிப்படுத்துகிறது என்று தனது அனுபவத்தை மேலும் விபரித்தார்.
1980களின் லத்தீன் அமெரிக்காவிற்கான நிமதீயின் அமர்விலும் அருட்தந்தை பணியாற்றினார். நிமதீயின் இவ்வமர்வு லத்தீன் அமெரிக்காவில் அக்காலத்தில் நிலவிய சர்வாதிகார அரசுகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவுசெய்தது.
1990களில் கொலம்பியாவில் இடம்பெற்ற கொடுமைகளை பதிவு செய்வதற்கான பல பணிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். 2008 இல் கொலம்பியாவில் பல்தேசிய கார்பரேசன்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிமதீ அமர்விலும் ஈடுபட்டார்.
கொலம்பியா அரசுக்கும் கொலம்பியாவின் ஆயுத போராட்ட அமைப்பான FARC என்ற அமைப்புக்கும் இடையே 2015 இல் நடந்த பேச்சுவார்த்தைகளில் இவரும் ஆலோசகராக பணியாற்றினார்.
நன்றி தமிழ்நெற்