மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேலும் இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்காவினால் தடைவிதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதில் வழங்கியுள்ளது.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று எழுப்பிய இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளார், ஒருவர், கொழும்பில் உள்ள தூதரகம், மற்றும் வெளிவிவகாரத் திணைக்களம் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இவ்வாறான விடயங்களை மீளாய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலகளவில் இடம்பெறுகின்ற செயற்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையிலேயே இந்த விடயத்தை அமெரிக்க தூதரகம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியையும், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கான பொறுப்புக்கூறலையும் மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் காரணமாக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் இருதரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்படாது. பாதுகாப்பு சீர்திருத்தத்தை ஊக்குவித்தல் உட்பட நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.