இலங்கையின் தேயிலைப் பெருந்தோட்டங்கள் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன.இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத நிலையில் பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் படிப்படியாக வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலை மற்றும் இதனால் ஏற்படும் பாதக விளைவுகள் என்பன தொடர்பிலும் பலர் தமது விசனப்பார்வையை செலுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மலையகத்தின் நமுனகுல, இந்தகல தோட்டத்தின் காணி வெளியாரினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அபாய நிலை குறித்து அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் தேசிய வருமானத்தில் தேயிலையின் ஆதிக்கம் தொடர்ச்சியாகவே வலுவானதாக இருந்து வந்துள்ளது.இது ஒரு சிறப்பம்சமாகும்.இதற்கேற்ப நாம் நோக்குகையில்1959 ம் ஆண்டில் இலங்கையின் அந்நியச் செலாவணி உழைப்பில் தேயிலையின் பங்களிப்பு 59.6 வீதமாக இருந்தது.இது 1969 இல் 57.8, 1976 இல் 43.6, 1978 இல் 48.5, 1982 இல் 29.6, 1986 இல் 27.2, 1987 இல் 25.9, 1989 இல் 24.3, 1990 இல் 24.9 வீதமாகக் காணப்பட்டது.
இலங்கை ஏற்றுமதி செய்யும் புடவைக் தொழிலுக்கான மூலப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணி, பெற்றோலிய ஏற்றுமதிகள் இரண்டையும் கழித்து விட்டுப் பார்த்தால்,1989 இல் மொத்த ஏற்றுமதிப் பெறுமதி 43,772 மில்லியன் ரூபாவாகும்.இந்த ஆண்டில் மொத்த தேயிலை ஏற்றுமதி மூலம் 13,644 மில்லியன் ரூபாய்கள் பெறப்பட்டன.
இது ஏற்றுமதியில் 31 வீதமாகும்.எனவே தேயிலையே தனி ஒரு ஏற்றுமதிப் பொருளாக பலகாலம் முக்கியத்துவம் பெற்று விளங்கிய நிலையில் உண்மை வருவாய் தேயிலையின் மூலமாகவே முதன்மையாகப் பெறப்பட்டுள்ளது என்பதனை புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதில் பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறையின் வகிபாகமும் கணிசமானது என்பதனை மறுப்பதற்கில்லை.
இதேவேளை தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில் 1945 இல் 125.6 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி இங்கு இடம்பெற்றது.இது 1960 இல் 197.5, 1976 இல் 196.6, 1982 இல் 187.8, 1990 இல் 233.0 மில்லியன் கிலோ கிராமாக அமைந்திருந்தது.இதேவேளை 1995 இல் இலங்கையின் பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தியினை நோக்கும்போது அது 168.8 மில்லியன் கிலோ கிராமாக காணப்பட்டது.
இவ்வுற்பத்தியானது 2000 இல் 100.1, 2005 இல் 111.5, 2010 இல் 100.8, 2017 இல் 104.0 மில்லியன் கிலோ கிராமாக அமைந்திருந்தது. எனினும் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சி கண்ட நிலையில் சிறு தோட்டங்களின் ஆதிக்கம் வலுப்பெற்றமைக்கு அரசாங்கத்தின் பெருந்தோட்டம் குறித்த ஓரவஞ்சனையே முக்கிய காரணமாகும்.இதனிடையே பெருந்தோட்டங்களை தொடர்ந்தும் மழுங்கடித்து சிறு தோட்டங்களை கையுயர்த்தி விடும் அரசாங்கத்தின் கபட செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் அதிகமாகவே இருந்து வருகின்றன.
இதேவேளை இலங்கையில் தேயிலை பயிரிடப்படும் விளைநிலங்களின் பரப்பளவு தொடர்பில் நாம் நோக்குகின்றபோது, 1985 இல் 231,650 ஹெக்டேயர் பரப்பில் தேயிலை பயிர்ச்செய்கை இடம்பெற்றது.1972 ம் ஆண்டு நாட்டின் காணி வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான வருடமாகும்.
இவ்வாண்டில் காணி உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில் இலங்கையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளின் உடைமைகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டது.இதன்படி நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 10 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியுடைமைகளும், பெருந்தோட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 20 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியார் உடைமைகளும் நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டன.
1972 ம் ஆண்டு காணிச் சீர்திருத்த நடவடிக்கையின் போது பெருந்தோட்டக் காணிகளில் சிறியளவான பகுதியினையே சுவீகரிக்க முடிந்த நிலையில் 1975 இல் காணிச் சீர்திருத்த நடவடிக்கையின் போதே பெரும்பகுதியிலான பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்பட்டன.1972 ம் ஆண்டு முதல் 1975 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 169,208 ஹெக்டேயர் தேயிலைத் காணிகள் அரசுடைமையாக்கப்பட்டன.ஏனையவை சிற்றுடைமையாக்கப்பட்டமையும் தெரிந்ததேயாகும்.
1977 இல் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் பெருந்தோட்டக் காணிகளின் நிர்வாக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்பவற்றின் கீழ் பெருந்தோட்டக் காணிகளைக் கொண்டு வந்தது.
பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்பட்டபோதும் அதன் நன்மைகளைத் தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.பெருந்தோட்டக் காணிகள் நிலமற்ற பெரும்பான்மை கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.இந்திய வம்சாவளியினர் வாக்குரிமை மற்றும் பிரசாவுரிமை இல்லாதிருந்த நிலையானது அவர்கள் நிலவுடைமைச் சமூகமாக மேலெழும்புவது உள்ளிட்ட பல விடயங்களுக்கும் தடைக்கல்லாக இருந்தது என்பதையும் கூறியாக வேண்டும்.1980 இல் பயனற்ற தேயிலைக் காணிகள் என்ற ரீதியில் சுமார் பத்தாயிரம் ஹெக்டேயர் காணிகள் இலங்கையின் முக்கிய இடங்களான கம்பளை, கண்டி, உலப்பனை, கடுகண்ணாவை, போன்ற பகுதிகளில் இனங்காணப்பட்டன.
இந்நிலங்களில் மாற்றுப்பயிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தேசித்திருந்த நிலையில் உலக வங்கியும் இதற்கு அனுசரணையாக இருந்தது.எனினும் இக்காணிகள் பின்னர் காணியற்ற கிராமிய மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.
இனவாத பின்புலம்
பெருந்தோட்ட தேயிலைக் காணிகள் பல சந்தர்ப்பங்களில் அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரிக்கப்பட்டமை வரலாறாகும்.எனினும் இச்சுவீகரிப்பின் பின்புலமானது இனவாதத்தை மையப்படுத்தியது என்றவாறு விமர்சனங்கள் பலவும் முன்வைக்கப்பட்டன.
இந்திய வம்சாவளி மக்களின் செறிவை பலவீனப்படுத்தி, அவர்களின் இருப்பு அடையாளம் என்பவற்றை கேள்விக்குறியாககுவதே இனவாதிகளின் முக்கிய நோக்கமாகுமென்று கண்டனங்கள் மேலெழுந்தன.எது எப்படியான போதும் பெருந்தோட்ட காணிச் சுவீகரிப்பு என்பது அம்மக்களின் அபிவிருத்தியில் பல்வேறு தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தி இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
தொழிலாளர்களின் வேலை நாள் பாதிப்பு, வருமான வீழ்ச்சி, அரசியல் பிரதிநிதித்துவ ரீதியான தாக்கங்கள் எனப்பலவற்றுக்கும் காணிச் சுவீகரிப்பு உந்துசக்தியாக அமைந்தது.அத்தோடு சில இடங்களில் பெருந்தோட்ட தேயிலைக் காணிகளை பெரும்பான்மை கிராமத்தவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், வேண்டுமென்றே இக்காணிகள் பற்றைக் காடுகளாக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் மேலெழுந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த கால மற்றும் சமகால வரலாறுகளை நோக்குகையில் பெரும்பாலான விடயங்களில் கிராமத்தினரை திருப்திப்படுத்த முனையும் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களை ஒரு பொருட்டாகக் கொள்வதே இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இது ஒரு புறமிருக்க பெருந்தோட்டக் காணிகளை வெளியார் ஆக்கிரமிக்கும் முயற்சி தொடர்பாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நடவடிக்கையை கண்டித்த தொழிலாளர்கள் பல இடங்களில் கிளர்ந்தெழுந்துள்ள சம்பவங்களும் அடிக்கடி நடந்தேறியுள்ளன.
அரசியல் தொழிற்சங்கவாதிகளும் தொழிலாளர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளனர்.பெருந்தோட்டக் காணிகளை வெளியார் ஆக்கிரமிக்கும் நிகழ்வு அண்மையில் பதுளை, நமுனுகுல,,இந்தகல பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளது.இந்தகல தோட்டத்திற்குரிய 50 ஏக்கர் காணியை வெளியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது கண்டனத்தை அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தோட்ட நிர்வாகம் மௌனமாக இருப்பதற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி என்னவென்பது தொடர்பில் மக்கள் பதற்றமடைந்துள்ளதாகவும், இதற்கான உடனடி நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ளாவிட்டால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண முனையும் என்றும் வடிவேல் சுரேஷ் காரசாரமாக தெரிவித்திருந்தார்.
பெருந்தோட்டப்புற காணிகளை வெளியார் ஆக்கிரமிக்கும் செயலானது தொழிலாளர்களிடையே பல்வேறு அதிருப்திகளையும் தோற்றுவித்துள்ளது.தோட்டங்களில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகிவரும் நிலையில் இதனால் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது.
தோட்டப் புறங்களில் பொலிஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் தொழிலாளர்கள் ஏற்கனவே அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் வெளியாரின் தோட்டப் புற ஊடுருவல் சம்பவங்கள் தோட்டங்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதோடு பாதுகாப்பு தரப்பினரின் தோட்டப்புற ஊடுருவலுக்கும் அது வாய்ப்பினை ஏற்படுத்துவதாகவே அமையும்.மேலும் கலாசார ரீதியான பாதிப்புக்களுக்கும் வெளியாரின் ஊடுருவல் வழிவகுக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
காணி மற்றும் வீடு என்பன உரிமை பெற்ற சமூகமாக ஒரு சமூகம் மேலெழும்புகையில் அதனால் சாதக விளைவுகள் அதிகரிக்குமென்றும் இதனூடாக ஒரு நாகரீகமான வாழ்க்கைச் சூழலை நோக்கி அடியெடுத்து வைக்கும் நிலை உருவாகுமென்றும் புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வகையில் நாட்டின் எழுச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்ட சமூகம் ஒரு சதுர அடி நிலமேனும சொந்தமாக இல்லாத நிலையில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகும். இது சாபக்கேடோ என்று கூட சில வேளைகளில் எண்ணத் தோன்றுகின்றது.
இந்நிலையில் பெருந்தோட்ட நிலங்களை வெளியாருக்கு தாரை வார்க்காது தேயிலையின் வளர்ச்சிக்கே உழைத்து உரமாகிப்போன, தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முனைதல் வேண்டும்.
இதனிடையே வெளியார் உற்பத்தி முறை தொடர்பில் கம்பெனிகள் அதிகமாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்நிலையானது எதிர்காலத்தில் பெருந்தோட்ட சமூகம் நிலவுடைமை மற்றும் வீட்டுடைமை சமூகமாக மாற்றம் பெறுவதற்கு அடிப்படையாக அமையும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் நோக்கத்தக்கதாகும்..எனவே இதன் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு இவ்விடயம் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.