றொக்கெட் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும் கண்ணுக்கு தெரியாத அரண்

Iron Dome system எனப்படும்  இந்த அரண், குறுகிய, தூர தரை முதல் வான் பாதுகாப்பு அமைப்பாகும். இதில் உள்ள சக்தி வாய்ந்த ராடார் மூலம் ஏவுகணைகள் ஏவப்பட்டு, இடைமறிப்பு கருவி மூலம் இஸ்ரேல் வான் பகுதிக்குள் நுழையும் ஏவுகணைகள் நடுவானிலேயே அழிக்கப்படுகிறன. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பது இஸ்ரேல் மீதான றொக்கெட் தாக்குதல் தான். ஹமாஸ் போராளிகள் ஆயிரக்கணக்கான றொக்கெட்களை இஸ்ரேல் மீது ஏவிய நிலையில்,  இஸ்ரேலின் றொக்கெட் எதிர்ப்பு அமைப்பு வானிலேயே றொக்கெட்களை இடைமறித்து அழித்து 90% தாக்குதலை முறியடித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், Iron Dome system எனப்படும் கண்ணுக்கு தெரியாத அரண், இஸ்ரேலை பாதுகாத்திருக்கிறது. இது குறித்து சற்று விரிவாக அறிந்து கொள்வோம்:

Iron Dome system என்றால் என்ன?

இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இஸ்ரேலிலும் Iron Dome system பாதுகாப்பு அரண் குறித்தும் பெரிய அளவில் பேசப்படுகிறது.

இது குறுகிய, தூர தரை முதல் வான் பாதுகாப்பு அமைப்பாகும். இதில் உள்ள சக்திவாய்ந்த  ராடார் மூலம் ஏவுகணைகள் ஏவப்பட்டு இடைமறிப்பு கருவி மூலம் இஸ்ரேல் வான் பகுதிக்குள் நுழையும் ஏவுகணைகள் நடுவானிலேயே அழிக்கப்படுகிறது.

எதிரி இலக்குகளிலிருந்து வரும் றொக்கெட்டுகள், ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் மோட்டார் ஆகியவற்றில் இருந்து தாக்குதல்களை எதிர்க்க டெல்-அவிவ் இந்த அமைப்பைப் பயன்படுத்துகிறது. அனுமதியின்றி இஸ்ரேல் வான்வெளியில் நுழையும் தேவையற்ற ஹெலிகாப்டர்கள், விமானம் அல்லது பிறவற்றை இந்த அமைப்பால் தடுக்க முடியும்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேல் – லெபனான் போரின் போது ஆயிரக்கணக்கான றொக்கெட்கள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டது, இப்போருக்கு பின்னர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்க இருப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியாகி 6 வருடங்கள் கழித்து 2011ஆம் ஆண்டு Iron Dome system இஸ்ரேலால் நிறுவப்பட்டது.

இதனை இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ரஃபேல் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளது. Iron Dome system குறித்து ரஃபேல் கூறுகையில், இந்த பல்நோக்கு பாதுகாப்பு அமைப்பு, மிக துல்லியமான தாக்குதல்களையும், எந்த வகையான வான்வழி தாக்குதல்களையும் முறியடிக்கக் கூடியது என புகழ்ந்துள்ளது.

இதன் வான் வழி வடிவம் மட்டுமல்லாது ஐ-வடிவம் எனப்படுவது  இராணுவ வீரர்கள்/தளபாடங்களுக்கு முன் சென்று பாதுகாப்பை வழங்குகிறது. இதன் மற்றொரு வடிவமான C-Dome, கடற்படை பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2000இற்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 90% பாதுகாப்பை Iron Dome system வழங்கியது என தெரிவித்துள்ள ரஃபேல், இது அனைத்து காலநிலைகளிலும், இரவு – பகல் என எந்நேரமும் பாதுகாப்பை வழங்கும் என்று கூறியுள்ளது.

இஸ்ரேல் –  பாலஸ்தீனம் தாக்குதல் பின்னணி:

ஜெருசலேம் யாருக்கு சொந்தம் என்பதில் அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. இதன் காரணமாக  எல்லையில் அடிக்கடி இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும். அந்தவகையில், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுக்களுக்கும் இடையே கடந்த 4 நாட்களாக கடும் மோதல்கள் வெடித்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு றொக்கெட் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

38 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட றொக்கெட்கள் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட நிலையில் இவற்றில் 90% நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. Iron Dome system என்ற பாதுகாப்பு அரணே இஸ்ரேலை பெரிய அசம்பாவிதத்தில் இருந்து காத்துள்ளது.