ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து – பலர் உயிரிழப்பு

674 Views

பங்களாதேஷில் உள்ள மிகப் பெரிய ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட  தீ விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச அகதிகள் நல அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மியான்மரில் இடம்பெற்ற இனப் படுகொலையில் இருந்து தப்பிய ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த முகாம்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த நான்கு நாட்களில் மட்டும் முகாம்களில் மூன்று தீ விபத்து சம்பங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 34 அகதி முகாம்களில் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை பாரிய தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதை அடுத்து அந்த முகாமில் இருந்த மக்கள்  பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நீண்ட நேர   முயற்சிக்குப் பின்னர் தீயை அணைத்தனர். எனினும் பெருமளவான முகாம் குடியிருப்புக்கள் தீயில் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.

இந்தத் தீவிபத்தில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளதாக  உள்ளூர் தீயணைப்பு சேவைத் தலைவர் ஷாஹாத் ஹொசைன் தெரிவித்துள்ளார்.

எனினும் இறப்புக்கள் தொடர்பில் உத்தியோகபூா்வ தகவல்களை பாங்களாதேஷ் அரசாங்கம் மற்றும்  காவல்துறையினர் உள்ளிட்ட தரப்பினர் இதுவரை உறுதி செய்யவில்லை.

இந்த விபத்தில் 1,500 முதல் 2,000 வரையான குடிசைகள் முற்றிலுமாக இந்தத் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டன என பங்களாதேஷ் அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்காக துணை தலைமை ஆணையர் ஷம்சுத் டூசா தெரிவித்துள்ளார்.

சுமார் 50 ஆயிரம் அகதிகள் இடம்பெயர்ந்து உறவினர்களின் முகாம்களிலும் வேறு இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளதாக காக்ஸ் பஜார் மாவட்டத்தின்  காவல்துறை அதிகாரி காசி சலாவுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்துக் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply