ராணுவ சிப்பாய் வெட்டுக்காயங்களுடன் மீட்பு!! இரு இராணுவத்தினர் கைது!!

வவுனியா போகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் தாக்கபட்ட சம்பவம் தொடர்பில் அதே முகாமை சேர்ந்த இராணுவ வீரர் உட்பட இரண்டு பேரை இராணுவபொலிசார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் போகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள “7 வது சிங்க றெயிமென்ட்” இராணுவ முகாமின் முன்னரங்க பகுதியில் கடமையாற்றிய இராணுவசிப்பாய் நேற்றயதினம் அதிகாலை 4 மணியளவில் தனது பணியினை முடித்துகொண்டு இராணுவமுகாமை நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது இனம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி தாக்கியுள்ளதுடன்,அவரது துப்பாக்கியினையும் பறித்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் இராணுவ முகாமை சேர்ந்த எம்.ரத்நாயக்க வயது 24 என்ற இராணுவவீரரே படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பாக இராணுவ பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் இராணுவ முகாமை சுற்றி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இராணுவ பொலிசாரிற்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கெக்கிராவை பகுதியில் வைத்து கைதுசெய்திருந்தனர்.
அவரிடமிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ரி56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் குறித்த இராணுவ முகாமில் சமையல் பகுதியில் பணியாற்றி வருபவர் என தெரிவித்த பொலிசார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அதே இராணுவ முகாமில் பணியாற்றும் மற்றொரு இராணுவ சிப்பாய் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply