ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக நாடுகளின் கருத்துக்கள்

ரஷ்யா கொரோனாவிற்கான தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடித்ததுடன் அதற்கு Sputnik V என்று பெயர் சூட்டியது. அத்துடன் தனது மகளுக்கு தடுப்புசி போடப்பட்டதாகவும் அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிவடையாத போது ரஷ்யா இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தொடர்பாக உலக நாடுகள் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. ஏனைய நாடுகளும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து வெளியிடுகையில், ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. சரியான தயரிப்புத் தானா என்பதை உறுதி செய்து கொண்டு, அதன் பின்னரே ரஷ்யாவிடம் கொள்முதல் செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பிரேசில் நாட்டின் பரானா மாகாண ஆளுநர் ரதினோ ஜுனியர் கூறுகையில் பிரேசிலுக்கான ரஷ்ய நாட்டு தூதுவரை சந்தித்து, இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்வது பற்றிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். ஆனால் பிரேசில் நாட்டின் மருத்துவ ஆய்வு அமைப்பு இந்த மருந்திற்கு ஒப்புதல் தருமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

கஜகஸ்தான் நாடு தனது அதிகாரிகளை ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு அனுப்பி மருந்து கொள்முதல் செய்வது பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளது. இந்த மாத இறுதியில் இந்தக் குழுவினர் ரஷ்யா செல்லவுள்ளனர்.

ஜேர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறுகையில், தற்போது போதிய அளவிற்கு பரிசோதனை செய்யப்படவில்லை. பாதுகாப்பான ஒரு தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தான் ஜேர்மன் நாட்டின் திட்டமாக இருக்கிறது. இதைத் தவிர ஊசி போட முதலில் தொடங்கிவிட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

பிரிட்டன் நாட்டின் சண்டே ரெலிகிராப் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ரஷ்யாவின் தடுப்பூசியை பிரிட்டன் பயன்படுத்தாது. ஏனெனில் மருத்துவ ரீதியாக முறைப்படி பரிசோதனை செய்த தடுப்பூசியை தான் பயன்படுத்த வேண்டும் ன்பது பிரிட்டன் கொள்கை. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் எதுவாக இரந்தாலும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்தை பிரிட்டன் விஞ்ஞானிகள் உறுதி செய்த பின்னர் தான் அதை மக்களுக்கு பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சுகாதார மற்றும் மனிதவள சேவை செயலாளர் அலெக்ஸ் அசார் கூறுகையில், தடுப்புசி தொடர்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். முதலில் தடுப்பூசி கொடுப்பது முக்கியம் இல்லை. தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.என்று தெரிவித்தார்.

இந்திய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், தடுப்பூசி தொடர்பான தேசிய நிபுணர் குழு 12ஆம் திகதி நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில் ரஷ்ய தடுப்புசி பற்றி விவாதிக்கப்படும். அதன் பின்னர் ஆலோசிக்கப்படும். பின்னர் உற்பத்தியாளர்களுடன் தேசிய தடுப்பூசி நிபுணர் குழு பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பூசியை கொள்முதல் செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தாரிக் ஐசாரெவிக் கூறுகையில், முழுப் பரிசோதனை முடியும் முன்பு, முன்கூட்டியே ஒரு தடுப்புசிக்கு அனுமதி கொடுக்க வேண்டுமானால், அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அனைத்து வகையான நெறிமுறைகளையும் அது பூர்த்தி செய்துள்ளதா என்பது பற்றியும் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதற்குப் பின்னர் தான் அனுமதி கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply